கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில், முதியவர் பேருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இதுகுறித்த பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பேருந்து நிலையத்தில் மாவட்ட முழுவதும் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகப் பேருந்து நிலையத்தில் எப்போதும் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 17) நள்ளிரவு, சிதம்பரத்திலிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்து, பயணிகளை இறக்கி விட்டு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராகியுள்ளது. அப்போது அங்கு வந்த சுமார் 50 வயதுடைய முதியவர் திடீரென சத்தம் போட்டுக் கொண்டே பேருந்தில் பாய்ந்து கீழே விழுந்தார். இதில், அவர் தலையின் மீது பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டு அங்கிருந்து ஓடியுள்ளனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து உடனடியாக திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையிலான காவல் துறையினர், இறந்த முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், கடந்த சில மாதங்களாக திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது. ஆனால், அந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த தகவல் தெரியாததாதல் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர் திடீரென்று பேருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் வாகன பேரணி.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்!