சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார், அப்போது பேசிய அவர், ''மேடையில் துரைமுருகன் பாடிய பாடலில் வார்த்தைகளுக்கான அர்த்தம் அவருக்கு தெரியாது. ஆனால், இதற்கு காவல்துறையினர் கைது செய்கின்றனர், இது சரியானது அல்ல.
அதிமுக தான் அந்த பாடலை மெட்டு அமைத்து பாடியுள்ளனர். பொதுவாகவே திமுக தான் பலமுறை பல தலைவர்களை இழிவாக பேசி வருகின்றனர். சண்டாளர் என்று ஒரு சமூகம் இருப்பது என்பது உண்மையாகவே எங்களுக்கு தெரியாது. சண்டாளர் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்தியது கருணாநிதி தான். கம்ப ராமாயணம், திருமூலர், கந்த சஷ்டி கவசம் ஆகிய அனைத்திலும் சண்டாளர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
சாட்டை துரைமுருகன் கன்னியாகுமரியில் பேசிய கருத்து நான் பேசிய கருத்துதான். சாட்டை துரை முருகனை திட்டமிட்டு கைது செய்துள்ளனர். தற்போது இந்தியாவில் சட்டம் என்பது உள்ளது, ஆனால் ஒழுங்காக உள்ளதா? 30 நாளில் 134 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். திறந்த வெளியில் பொது விவாதம் வையுங்கள், நான் தயாராக இருக்கிறேன். ஓட்டுக்கு 500 இப்போது 5 ஆயிரம், இதுதான் அவர்களது சாதனை. சண்டாளர் என்ற வார்த்தையை நான் உபயோகித்தது தவறு என்றால். முதலில் கருணாநிதி மீது வழக்கு பதியுங்கள். பின்னர் என் மீது பதியுங்கள்.
பெயர் தான் தமிழ்நாடு, ஆனால் இது வெறும் சுடுகாடு. தமிழகத்தின் தலைவர்கள் என்று பெயரளவில் தான் இருக்கிறார்கள். தமிழ் பேரினத்தின் ஒரே ஒரு தலைவர் தான், அது எங்கள் பிரபாகரன் தான். சாராய போதை தலைவிரித்து ஆடுகிறது, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தவர்கள் போதையில் தான் கொலை செய்தனர். காவல்துறை என்பது பாதுகாப்பு கொடுக்க வேண்டும், ஆனால் நம்மை நாமே பாதுகாக்கச் சொல்கிறது. நான் பேசுவதற்கு என்னை சிறையில் கூட அடையுங்கள். ஆனால், நான் ஜெயிலுக்கு போனாலும் மீண்டும் வந்து உங்களைத்தான் கேள்வி கேட்பேன்'' என்றார்.
அதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து பேசியவர், ''இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்று அனைவருக்கும் தெரியும். அமைச்சர்கள் பணத்தை வாரி இறைக்கின்றனர். சாதி, மதம், சாராயம் என்று தான் தேர்தல் இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பில்லாத கட்சியோடு கூட்டணியில் உள்ளது. எனக்கு திராவிட எதிர்ப்பை கற்றுக் கொடுத்தவர் திருமாவளவன் தான். வட மாவட்டங்களில் திருமாவளவன் இல்லாமல் திமுக வெற்றி பெற்றிருக்க முடியுமா?''என்று பேசினார். அப்போது 2026ஆம் ஆண்டு கூட்டணி இருக்குமா என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, ''வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி உண்டு'' என்று கூறினார்.