மயிலாடுதுறை: நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது. இதன் ஒருபகுதியாக, மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பி.காளியம்மாளை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய சீமான், "கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக 39 இடங்களைக் கைப்பற்றியது. அப்போதும் மோடிதான் பிரதமராக பதவி ஏற்றார். அவர் நம் மக்களுக்காக ஒன்றும் செய்ததில்லை. நமது உரிமையை பறித்துக் கொள்பவர்களுக்கும், உரிமையைத் தர மறுப்பவர்களுக்கும் எதற்கு வாக்களிக்க வேண்டும்?
காவிரி நீர் கிடைக்காமல் போக காங்கிரஸ் மற்றும் திமுக தான் காரணம். முல்லை பெரியாரில் இருந்து திமுக அரசால் நீரைப் பெற்றுத்தர முடியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்யும் கேரளாவில் இருந்து தண்ணீர் கேட்டால் அடித்து விரட்டுகிறார்கள்.
குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டன. அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது, திமுகதான். மத்திய அரசு தனிப்பட்ட பெரும் முதலாளிகளின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சி எனக் காட்டுகிறார்கள்" எனக் கடுமையாக சாடினார்.
தொடர்ந்து பேசிய சீமான், "திட்டமிட்டு நடத்தப்பட்ட மணிப்பூர் கலவரம் (Manipur Violence) குறித்து பிரதமர் மோடி வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. நாட்டின் முதல் குடிமகளான திரௌபதி முர்முவுக்கு இந்த ஆட்சியில் மரியாதை இல்லை. பசுவை புனிதமாக பேசுபவர்கள் வெளிநாடுகளுக்கு 24 லட்சம் டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளனர்.
ரூ.56 லட்சம் கோடியாக இந்தியாவின் கடன் இருந்த நிலையில், தற்போது மோடி ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் அது ரூ.156 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் மக்கள் தெருக்கோடிக்குத்தான் செல்ல வேண்டும். இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் பண மதிப்பிழப்பும் மற்றும் ஜிஎஸ்டி வரியும்தான் என உலக வங்கி (World Bank) சொல்கிறது.
உலக வங்கியின் கருத்துக்கு சங்கிகளிடம் பதில் இல்லை. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்கிறது, பாஜக அரசு. ஒரே தேர்தல் நடத்தினால் நாட்டில் வறுமை ஒழிந்திடுமா? ஒரே நாடு என்றால் தண்ணீர் ஏன் நம் மக்களுக்கு கிடைக்கவில்லை? ஒரு தனியார் முதலாளியால் தரக்கூடிய கல்வி மருத்துவத்தை அரசு தரமுடியாமல் தோற்றுப் போய்விட்டது.
எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தயவுசெய்து பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள். புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று கூறும் பிரதமர் மோடி 10 ஆண்டு காலம் என்ன செய்தார். பாஜக அல்லது காங்கிரஸுக்கு ஏன் ஓட்டுப்போட வேண்டும் என்ற ஒரு நிமிடம் சிந்தியுங்கள்" என்று பேசினார்.
இதையும் படிங்க: அண்ணாமலையை சூழ்ந்த போலீசார்..சூலூரில் நள்ளிரவில் வாக்கு சேகரிப்பு..அண்ணாமலை உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு