சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு யாருக்கும் அடிமைப்படக்கூடாது என போராடியவர். அன்னை நிலத்தில் ஒரு பிடி மண்ணைக் கூட ஆங்கிலேயர் எடுத்து விடக்கூடாது என்றும் மக்கள் யாருக்கும் அடிமையாகி விடக்கூடாது என்றும் போராடியவர். அடிமை வாழ்வை விட சுதந்திர சாவு மேலானது எனக் கூறியவர்" என புகழ்ந்தார்.
பின்னர், சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "கள்ளச்சாராயம் விற்றவர்கள், 31 நாட்களில் 100க்கும் மேலான கொலை செய்தவர்கள், கள்ளக்குறிச்சி மரணங்கள், கடந்த ஆண்டு மரக்காணம் மரணங்கள், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை என இதில் தொடர்புடையவர்கள் மீதெல்லாம் பாயாத சட்டம், மேடையில் பேசிய ஒரே ஒரு குற்றத்திற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்திருக்கிறார்கள். அவர் அவதூறாகப் பேசவில்லை, ஏற்கனவே இருந்த பாடலைத் தான் பாடினார். நானும் அந்த பாட்டைப் பாடுகிறேன், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்" எனக் கூறிய சீமான் சாட்டை துரைமுருகன் பாடிய பாடலை பாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் தீய ஆட்சியின் தொடக்கம் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு தான். அவரது ஆட்சிக் காலத்தில் தான் ஊழல், கொலை, கொள்ளை, லஞ்சம், அநாகரிக அரசியல், சாராயம் உள்ளிட்டவை வந்தது. எதிர்க்கட்சியாக இருந்தபோது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி குறித்து மு.க.ஸ்டாலின் பேசிய பதிவுகள் எல்லாம் இருக்கிறது.
நீங்கள் பேசினால் கருத்துரிமை, நாங்கள் பேசினால் அவமதிப்பா? சாட்டை துரைமுருகனை கருணாநிதியைப் பற்றி தவறாக பேசியதற்காக கைது செய்திருக்கிறார்கள். கருணாநிதி என்ன இறைத்தூதரா, இயேசுவா, பகவான் கிருஷ்ணனா" என சரமாரி கேள்வி எழுப்பினார்.
சாதி வெறுப்பு கொண்ட ஐபிஎஸ் அதிகாரி: "ஐபிஎஸ் அதிகாரி வருண் குமாருக்கு சாதிய ரீதியான வெறுப்பு உள்ளது. அதனால் தான் எங்களை தொடர்ந்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். உதயநிதியோடு நெருங்கிப் பழகும் ரத்தீஷ் தான் காவல்துறை அதிகாரிகளின் பணியிடங்களை மாற்றி வருகிறார். இது குறித்து ஆதாரங்கள் தர நான் தயார்.
பேசுவதற்கெல்லாம் கைது செய்வதா, நானும் தான் பேசுகிறேன், என்னை கைது செய்யுங்கள். டெல்லியில் இருந்த பெலிக்ஸின் அலைபேசியை ஒட்டுக் கேட்க தெரிகிறது, என்னுடைய அலைபேசியை ஒட்டு கேட்க தெரிகிறது. கள்ளச்சாராயம் விற்பவர்கள், ஆம்ஸ்ட்ராங்கை கொலை திட்டமிட்டவர்களின் அலைபேசிகளைக் கேட்க முடிவில்லையா" என்றார்.
தேர்தல் யாருக்கானது: மேலும் பேசிய அவர், “6 ஆயிரத்து 111 ஏக்கரில் காட்டுப்பள்ளியில் துறைமுகத்திற்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதை அதானி கட்ட வேண்டிய தேவை என்ன? துறைமுகம், விமான நிலையங்கள் எல்லாம் அதானி கட்டினால் நாடு என்னவாகும்? நடந்து முடிந்த தேர்தல் யாருக்கானது? தலைவருக்கானதா, தரகருக்கானதா?
சீமான் இருக்கும் வரை காட்டுப்பள்ளியில் அதானியின் துறைமுகத்தை கட்ட முடியாது. இத்தனை கோடி மக்கள் வாழும் நாடு ஐந்து பெரிய முதலாளிகளின் வீடாக மாறியது எப்படி? முதலமைச்சரின் கீழ் இருக்கும் துறையே சரியில்லை, தார்மீக பொறுப்பேற்று உடனடியாக ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.
ஆட்சியாளர்களின் அவப்பெயருக்கு காவல்துறை அதிகாரிகள் பலியாடுகளாக மாறுகிறார்கள். கேட்டால் மேல் இடத்தின் அழுத்தம் எனக் கூறுகிறார்கள். யார் அந்த மேலிடம் என்றால் உதயநிதி தான். விக்கிரவாண்டி தேர்தல் குறித்து நாளை மறுநாள் தெரியவரும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'ஒவ்வொரு பேயாக ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்' - ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி!