சென்னை: துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கேந்திர வித்யாலயா வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் வாக்கு செலுத்தும் போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டன் வேலை செய்யவில்லை என குற்றம் சாட்டிய நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் மனுவை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்களுக்கு ஒரு புகார் வந்தது. அந்த புகார் என்னவென்றால், எங்களுடைய கட்சி நபர் ஒருவர் வாக்குச் செலுத்தும் போது, எங்களுடைய சின்னத்திற்கு வாக்கு விழவில்லை. இந்நிலையில், வேறு ஒரு பட்டனை அழுத்திப் பார்க்கும் போது, வேறு கட்சிக்கு வாக்கு விழுந்துள்ளது. எனவே அவர் இயந்திரத்தில் நமது பட்டன் வேலை செய்யவில்லை என எங்களிடம் புகாராகத் தெரிவித்தார்.
உடனடியாக நாங்கள் அங்கே சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம், எங்களுக்கு இந்த மாதிரியான புகார் இருக்கிறது என்று கூறினோம். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள், காலையில் இந்தப் புகார் இருந்தது, தற்போது அந்த பிரச்னை சரி செய்ததாகக் கூறினார்கள்.
நாங்கள் டெஸ்ட் செய்து காட்டச் செல்லி கேட்டோம். ஒரு வேளை இயந்திரம் சரியாக இருந்தால், எங்களைக் கைது செய்யுங்கள் எனக் கூறினோம். ஆனால், இயந்திரம் சரி இல்லை என்றால் என்ன செய்வீர்கள் என நாங்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கு அதிகாரிகள் இயந்திரத்தை மாற்றுவோம் எனக் கூறினார்கள்.
உடனடியாக, இவ்வளவு நேரம் செலுத்திய வாக்குகளை என்ன செய்வது என திமுகவினர் பிரச்னை செய்தனர். அதுவரை ஒத்துழைப்பு தந்த காவல்துறையினர், திமுகவினர் வந்ததும் கடுமையாக நடத்து கொண்டு, எங்களை ஒருமையில் திட்டினார்கள். ஊடகத்திற்குப் பேட்டி கொடுக்காமல் எங்களைத் தடுத்தார்கள். பின்னர், தர்ணாவில் ஈடுபட்டோம். உடனே கைது செய்தார்கள்.
இதுகுறித்து தமிழகத் தேர்தல் ஆணையத்தில் எங்களுடைய பட்டன் வேலை செய்யவில்லை எனவும், மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தோம். எங்கள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்" என்று கூறினார்.
இதையும் படிங்க: நடுக்குப்பம் கிராமத்தில் வாக்களிக்க 6 மணிக்கு குவித்த மக்கள்: டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. - Lok Sabha Election 2024