திருநெல்வேலி: 2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதியை எதிர்நோக்கி நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக, தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
குறிப்பாக, ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில், நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பரப்புரைக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, பரப்பரைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், தேர்தலின் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் திமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில், வார் ரூம் (war room) திறக்கப்பட்டும் வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில், பாளையங்கோட்டை மகாராஜ நகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில், வழக்கறிஞர் அணி வார் ரூம் திறக்கும் நிகழ்ச்சி, மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக மாநில சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வார் ரூம் அறையை திறந்து வைத்தார்.
இதனையடுத்து, வார் ரூம் அறையில் என்னென்ன பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்தார். அதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் தொடர்பு எண்கள் அடங்கிய புத்தகங்கள், சட்ட ஆலோசனை தொடர்பான புத்தகங்கள் மற்றும் இரண்டு கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாவட்ட நிர்வாகி தெரிவித்தார்.
அதற்கு, திமுக மாநில சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, அனைத்தும் செயல்பாட்டில் இருந்தால் சரி என்று கூறினார். இதனையடுத்து, மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பனின் மகன், இளங்கோவிடம் வொர்க்கிங் கண்டிஷன் என்று எதை கூறுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு, இளங்கோ சிரித்துக் கொண்டே புரிஞ்சுகிட்டா சரி என்று கூறினார்.
பின்னர் கூட்டத்தில், திமுக மாநில சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேசுகையில், “தற்போதைய தேர்தல் ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையில் நடக்கும் போட்டி. பாஜக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால், நாட்டில் தேர்தல் நடக்காது, அரசியல் அமைப்புச் சட்டம் இருக்காது, மதச்சார்பின்மை இருக்காது.
அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் கடமை வழக்கறிஞர்களுக்கு அதிகம் உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், 40-க்கு 40 என இந்தியா கூட்டணி வெற்றி பெறும். தமிழர்கள் மதச்சார்புடைய அரசியலை ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதை நிருபிக்கும் வகையில், கடந்த தேர்தலைக் காட்டிலும், நடப்புத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று வேற்றி பெற வேண்டும்” என்றார்.
வழக்கறிஞர் அணியின் முதல் பணியானது, பிஎல்ஏ 2 முகவர்கள் நியமனம், இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவாகி உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். வழக்கறிஞர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும்.
மேலும், தபால் வாக்குகள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தபால் வாக்குகளின் புள்ளி விவரங்களை முன்கூட்டியே சேகரித்து, அவர்களை நேரில் சந்தித்து, வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வைக்க வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்க வழக்கறிஞர் அணி தீவிரமாக பணியாற்ற வேண்டும்” என அவர் கூறினார்.
இதையும் படிங்க: நெல்லை மக்களவை தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியா? திடீர் டெல்லி பயணத்தின் பின்னணி என்ன?