சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 11 மணியளவில் பேசின் பிரிட்ஜ் வழியாக யார்டுக்கு சென்ற நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பேசின் பிரிட்ஜ் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, சாணிக்குளம் பகுதிக்கு அருகே இன்ஜினின் முன் பக்க மூன்று ஜோடி சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இது குறித்து ரயில் ஓட்டுநர், ரயில்வே துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள். தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கிய மூன்று ஜோடி சக்கரங்களை மீண்டும் தண்டவாளத்திற்குத் தூக்கி வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விரைவு ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் பணிகள் நடைபெற்று வருவதால், மற்றொரு தண்டவாளத்தில் விரைவு ரயில் அனைத்தும் இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் ஆட்கள் இல்லாமல் சென்ற ரயில் சக்கரம் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லியில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!