தென்காசி: நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உட்பட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (NIA) இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி கிராமத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மதிவாணன் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
முன்னதாக, கடந்த இரண்டு நாட்களாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு, மதிவாணனுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக ஆதாரங்கள் திரட்டியதாக கூறபடும் நிலையில் இன்று (பிப்.2) காலை முதல் மதிவாணன் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும், மதிவாணனுக்கு சொந்தமான ஸ்டுடியோவிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் வீட்டில் 'NIA' அதிகாரிகள் சோதனை!
சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை நிறைவுற்றுள்ள நிலையில், மதிவாணன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான ஸ்டூடியோவில் இருந்து 3 செல்போன்கள் மற்றும் ஆவணப் புத்தகங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும், வரும் 7ஆம் தேதி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில், நேரில் ஆஜராகும் படி சமன் கொடுத்துள்ளனர்.
வழக்கமாக பயங்கரவாத அமைப்புகள், சட்டவிரோத அமைப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர், தற்போது நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் உட்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: போஸ்டர் அடி.. அண்ணன் ரெடி.. விஜயின் கட்சி குறித்து இன்று அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்!