சென்னை: விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே சென்னையில் பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடந்துள்ளன. இந்த சட்டங்களால் நீதிமன்ற நிர்வாகத்தில் கடும் குழப்பம் ஏற்படுவதோடு, மக்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இச்சட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகளின் தயக்கத்தை உணர்ந்து, இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தமிழக அரசு இதில் திருத்தம் கொண்டுவர உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதனை நடைமுறைப் படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது" என திருமாவளவன் கூறினார்.
தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசும்போது ஒலிபெருக்கி அணைக்கப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, "பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் செய்வது கடந்த பத்தாண்டுகளாக வாடிக்கையாக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசும்போது ஒலிபெருக்கியை நிறுத்துவது, வாய்ப்புகளை மறுப்பது, அவர்களின் வழக்கமான எதேச்சதிகாரமான போக்கு. இப்போதும் அது தொடர்கிறது.
அதே சபாநாயகர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அணுகுமுறையைக் கையாண்டார். ஆனால் கடந்த காலங்களில் போல இல்லாமல், 200 இடங்களுக்கு மேல் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும். ஆளுங்கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் அளவுக்கு எங்களின் செயல்பாடுகள் இருக்கும்" என திருமாவளவன் பதிலளித்தார்.
தொடர்ந்து இலங்கையின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் மறைவு குறித்து கேட்டபோது, "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவு வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் இயக்கத்திற்கும், ஈழத் தமிழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், ராமேஸ்வரம் பகுதியில் 27 மீனவர்கள் சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர் கதையாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் இதில் தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று திருமாவளவன் கூறினார்.
இதையும் படிங்க: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக கும்பகோணம் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்!