திருநெல்வேலி: நெல்லையிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நெல்லை-மேட்டுப்பாளையம் வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது நெல்லை ஜங்ஷனில் இருந்து புறப்பட்டு சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி மற்றும் ராஜபாளையம் விருதுநகர், கோவை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு திங்கட்கிழமை காலை 7:15 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயிலில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
நிற்காமல் சென்ற ரயில்: இந்த நிலையில் நேற்றிரவு( ஞாயிற்றுக்கிழமை) 7:00 மணிக்கு நெல்லை ஜங்ஷனில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்திற்கு சுமார் 7.40 மணியளவில் வந்தடைந்தது. ஆனால் அங்கு நிறுத்தம் இருந்தும் ரயிலானது நிற்காமல் சென்றது.
இதனால் கல்லிடைக்குறிச்சியில் இறங்க வேண்டிய சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ரயிலில் ஏற காத்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கல்லிடைக்குறிச்சியில் இறங்க வேண்டிய பயணிகள் அடுத்த ரயில் நிலையமான அம்பாசமுந்திரம் ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளனர்.
இதேபோல் கல்லிடைக்குறிச்சியில் இருந்து பழனி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக டிக்கெட் எடுத்து காத்திருந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் ரயில் நிற்காததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.
அதிகாரிகள் விசாரணை: இதனையடுத்து உடனடியாக கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பயணிகள் கல்லிடைக்குறிச்சி ரயில்வே நிலைய அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். என்ன காரணத்திற்காக ரயில் நிற்காமல் சென்றது? என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து ரயில் பயணிகள் நலச் சங்கம் மற்றும் ரயில்வே நிலைய அலுவலர் ரயில்வே மதுரை கோட்ட அலுவலரிடம் தொடர்பு கொண்டு நடத்தவற்றை கூறியுள்ளனர். இதனையடுத்து கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் மேட்டுப்பாளையம் ரயில் நிற்காமல் சென்றதால் ரயிலை தவறவிட்ட பயணிகளுக்காக ஈரோட்டிலிருந்து இரவு 09.25 மணிக்கு செங்கோட்டை செல்லும் விரைவு பேசஞ்சர் ரயிலில் ஏற்றிவிட்டனர்.
அதேபோல் கல்லிடைக்குறிச்சியில் இறங்க வேண்டிய பயணிகள் அம்பாசமுத்திரத்தில் இறக்கி விடப்பட்ட நிலையில் அங்கிருந்து ரயில் நிலையம் சார்பில் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு அவர்கள் கல்லிடைக்குறிச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து விசாரித்தபோது ரயில் ஓட்டுநருக்கு நிறுத்தம் குறித்து தகவல் சரிவர கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே தொழில்நுட்ப பிழை காரணமா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடி மாற்றம்.. புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம்!