புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ஆம் தேதி மாயமானார். 3 நாட்கள் கழித்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தக் கொலை சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீசார், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் (59), கருணாஸ் (19) ஆகிய இருவரை கைது செய்தனர்.
தொடர்ந்து, இந்த வழக்ககை சீனியர் எஸ்.பி. கலைவாணன், எஸ்.பி. லட்சுமி சவுஜன்யா தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இச்சம்பவத்தால், முத்தியால்பேட்டையில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் 32 கான்ஸ்டபிள்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். சிறப்பு விசாரணைக் குழு, சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த தடயங்கள், பெற்றோர் ரத்த மாதிரிகள், கைது செய்யப்பட்ட இருவரின் ரத்த மாதிரிகளை சேகரித்து தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது.
மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கருணாஸ் மற்றும் விவேகானந்தன் இருவரையும், இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வாக்கு மூலங்களையும் பதிவு செய்தனர். சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள், தடயவியல் ஆய்வக பரிசோதனைகள் மற்றும் டி.என்.ஏ அறிக்கைகளும் பெறப்பட்டது.
இந்த வழக்கின் ஒவ்வொரு விசாரணைப் படிகளையும் டிஜிபி விசாரித்து வந்துள்ளார். இதில் பல நூறு பக்ககங்கள் கொண்ட விசாரணை அறிக்கையைத் தயாரித்து டிஜிபி மூலம் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போக்சோ சட்டத்தின் கீழ் 60 நாட்களுக்குள் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், இன்று 80 சாட்சிகளுடன், 500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை இணைய வழியில் போக்சோ நீதிமன்றத்துக்கு பதிவேற்றம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, எஸ்பி லட்சுமி மற்றும் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் இன்று மாலை போக்கோ நீதிமன்றத்துக்கு வந்து நீதிபதி முன்பு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு எஸ்பி லட்சுமி சவுதன்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். அதை நீதிபதி ஏற்றுள்ளார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: சேலம் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல்; சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையில் கடைகளுக்கு தீ வைப்பு; போலீசார் தடியடி! - Salem Festival Clash