சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் சிங்காரத்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் ஐயப்பன் (48). இவர், அவரது தாய் மற்றும் மனைவி சரண்யா (39), இரண்டு குழந்தைகள் என வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் குடும்பத்துடன் செஞ்சி பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு வீடு திரும்பிய ஐயப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, ஐயப்பன் உடனடியாக ஓட்டேரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரனையில், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த நபர் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து, படுக்கையறை என நினைத்து சமையலறை பூட்டை உடைத்துள்ளார்.
சமையலறை உள்ளே சென்ற மர்ம நபர் அங்கு இருந்த அரிசி, பருப்பு, மிளகாய் பொடி என கண்ணில் பட்ட சமையல் பொருட்களை எல்லாம் பார்சல் செய்து எடுத்துக் கொண்டு பின்னர் படுக்கையறை பூட்டை உடைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த 7 சவரன் தங்கம், வெள்ளி டம்ளர் மற்றும் வெள்ளி விளக்கு ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
இதற்கிடையே, ஐயப்பன் வீட்டின் அருகே உள்ள தமிழ்ச்செல்வி என்பவரின் வீட்டில் 27 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டதாக காவல் துறைக்கு புகார் வந்த நிலையில், போலீசார் இந்த இரண்டு சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? ஒரே நபர் அரங்கேற்றிய கொள்ளையா? இல்லை வேறு வேறு நபர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அந்தப் பகுதிகளில் சிசிடிவி இல்லாததால் மற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளில் ஆய்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளனர். இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து 34 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரவுடி முருகையன் கொலை வழக்கு; தஞ்சையில் சரணடைந்த சாமி ரவி!