சென்னை: உத்தரகாண்ட் மாநிலத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. அதில் தமிழ்நாடு, கேரளா, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 28 மாநிலங்களிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்கள்: மேலும், தேசிய அளவில் நடைபெற்ற இந்த கராத்தே போட்டியில் கேடட், ஜூனியர், அண்டர் 21, சீனியர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. சீனியர் பிரிவில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கராத்தே வீரரும் வழக்கறிஞருமான அருண்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு நபர் விக்னேஷ் என்பவர் ஜூனியர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச போட்டிகளுக்கு அருண்குமார் தேர்வு: தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அருண்குமார் தெற்கு ஆசியா, ஆசியா, காமன்வெல்த் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், உத்தரகாண்டில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்த கராத்தே வீரர்களுக்கு அவரது உறவினர்கள் மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அருண்குமார், "தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் 28 மாநிலங்களில் இருந்து பல்வேறு வீரர்கள் கலந்து கொண்டனர். நான் சீனியர் பிரிவில் நடந்த கராத்தே சண்டை போட்டியில் பங்கேற்றுத் தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். தேசிய அளவில் நடைபெற்ற இந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நான் இந்தியா சார்பாக தெற்காசியா காமன்வெல்த் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியுள்ளேன் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
'உதவினால் பதக்கம் வெல்வேன்' அரசுக்கு அருண்குமார் கோரிக்கை: நாங்கள் பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த உதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை. நான் கடந்த 2018ஆம் ஆண்டு தெற்கு ஆசியா விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றேன். இது குறித்து அரசிடம் தெரிவித்தோம். ஆனால், எனக்கு எந்த உதவியும், ஊக்கமும் கிடைக்கவில்லை.
தற்போது தெற்காசிய காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்க உள்ளேன். மீண்டும் அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். அரசு ஏதாவது உதவியும், ஊக்கமும் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து தங்கப்பதக்கத்தை காண்பித்து கோரிக்கை வைக்க உள்ளேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தரமான பந்து வீச்சு டெல்லியை வீழ்த்தியது ஆர்சிபி..பிளே ஆஃப் வாய்பை தக்கவைத்தது!