சென்னை: காஞ்சிபுரம் அருகே உள்ள நத்தப்பேட்டை கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி மூலம் சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. தவிர மீன்பிடித்தலும் இந்த ஏரியில் முக்கிய தொழிலாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மஞ்சள் நீர், கால்வாய் வழியாக நத்தப்பேட்டை ஏரியில் விடப்படுகின்றன. நத்தப்பேட்டை ஏரியின் உபரிநீர் வையாவூர் ஏரி, களியனூர் ஏரி, உழையூர் ஏரி, பூசிவாக்கம் ஏரி, ஊத்துக்காடு ஏரி ஆகிய ஏரிகளுக்கு செல்கிறது.
நத்தப்பேட்டை ஏரியில் கழிவுநீர் கலப்பதால் இந்த ஏரி மட்டுமல்லாமல் மற்ற ஏரிகளின் நீரும் மாசடைகின்றன. வீட்டுக் கழிவுகள் மட்டுமன்றி, சாயப்பட்டறை கழிவுகளும் ஏரிகளில் அதிகளவில் கலப்பதால் சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. விசாரணையின் போது, நத்தப்பேட்டை, வையாவூர் ஏரிகளை 50 கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்த கருத்துக்கேட்பு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், “நத்தப்பேட்டை ஏரியில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலப்பதாக கூறப்படுகிறது. அப்படியானால், காஞ்சிபுரம் ஆட்சியர் இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனரிடம் தெரியப்படுத்தலாம்.
மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லலாம். நீர்வளத்துறை ஏரிகளை மீட்டு அழகுபடுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அந்தப் பணி முடிவடையும் வரை ஏரியை பராமரிப்பது நீர்வளத் துறையின் கடமையாகும்.
நத்தப்பேட்டை ஏரியில் கழிவுநீர் கலக்கும் விவகாரத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் மீது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நத்தப்பேட்டை ஏரியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது' என உத்தரவிட்டது.
இதையும் படிங்க: சென்னை கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தை மேற்கொள்ள தடை.. தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறுவது என்ன?