திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தின் 25வது ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை 23) அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வை ஒட்டி, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடும்பத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்விற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மாஞ்சோலை விவகாரத்தில் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சியில் தேயிலைத் தோட்ட நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ஓய்வுப் பணமாக ரூ.2 லட்சம் தருவதாக கூறி முதற்கட்டமாக 25 சதவீதம் நிதி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மாநில அரசு கருணையோடு அங்குள்ள மக்களுக்கு உறைவிடமும், அங்கேயே அவர்களுக்கு பணி வழங்க தேவையான நடவடிக்கையும் எடுக்கவேண்டும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனிதாபிமான அடிப்படையில் மாஞ்சோலை மக்களுக்கு கருணை காட்ட வேண்டும். மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்துப் பேச நேரம் கேட்கப்பட்ட நிலையில், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசை, நெல்லையில் சந்தித்து மாஞ்சோலை மக்கள் விவகாரம் தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது, மாஞ்சோலை மக்கள், திமுக, மதிமுக நிர்வாகிகளுடன் பாஜக சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசை சந்தித்து மாஞ்சோலை மக்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். அதற்கு, நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு தமிழக முதல்வரிடம் பேசி நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மாஞ்சோலை மக்களுக்கு தேவையான அனைத்தும் செய்துகொடுப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசும் உறுதியளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: 2 நாள் கஸ்டடியில் எம்.ஆர். விஜயபாஸ்கர்... சிபிசிஐடி தீவிர விசாரணை..!