கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே வடலிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருள் (33). இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் வடலிவிளை பகுதியில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் சாமி ஆடுவார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வடலிவிளை சுடலை மாடன் சாமி கோயிலில் சிறப்புப் பூஜை நடைபெற்றது.
பூஜையின் போது வைக்கப்படும் மதுவை, பூஜை முடிந்தவுடன் படையலில் வைக்கப்பட்ட மதுவைக் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் அருள். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையும் கோயில் பூஜையில் மது படையல் வைக்கப்பட்டது. பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மதுவை வழக்கம் போல் அருள் எடுத்து சென்று தனது உறவினரும் வைத்தியநாதபுரம் கோயில் பூசாரியுமான செல்வகுமார் என்பவருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளனர்.
இதில் செல்வகுமார் வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர், ஆனால் செல்லும் வழியிலேயே செல்வகுமார் உயிரிழந்தார்.
இதே போல் செல்வகுமாருடன் மது அருந்திய அருள் ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையில் இறந்து போன செல்வகுமார் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் விஷம் கலந்த மது அருந்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக எஸ்பி சுந்தரவதனம் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் வடலிவிளை வயல் தெருவைச் சேர்ந்த அஜி என்ற (46) சதீஷ் என்பவர் மதுவில் விஷம் கலந்தது உறுதியானது. இதனை அடுத்து அஜியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது அஜியும், அருளும் ஒரே கோயிலில் சாமி ஆடுவது வழக்கம். அப்போது அஜியிடம், அருள் என்பவர் போலியாக சாமி நடனம் ஆடுகிறா என கிண்டல் செய்துள்ளார். இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் கோயிலுக்கு வந்த அருள் சாமி ஆடுவது தொடர்பாகப் பேசிவிட்டுச் சென்று உள்ளார். அப்போது பூஜையில் வைக்கும் மது எனக்குத் தான் வேண்டும். இதை யாராவது கேட்டால் தொலைத்து விடுவேன் எனக் கூறியுள்ளார்.
இதனால் அருளைப் பழி வாங்குவதற்காக மதுவில் தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை, அஜி கலந்து உள்ளார். அவர் எதிர்பார்த்தபடியே பூஜை முடிந்த பின்னர் அந்த மதுவை அருள் எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் அருளின் உறவினர் செல்வகுமாரும் அந்த மதுவை அருந்தியுள்ளார். இதனால் வீட்டுக்குச் சென்றதும் செல்வகுமார் வாந்தி எடுத்து உயிரிழந்து உள்ளார்.
அருளும் சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். மதுவை அருள் மட்டுமே குடிப்பார் என அஜித் நினைத்து உள்ளார். இதை செல்வகுமாருக்கும் கொடுத்து உயிரிழந்ததால், தலைமறைவாகத் திட்டமிட்ட அஜியை, போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். முன் விரோதம் காரணமாகக் கோயிலில் சாமிக்குப் படைக்கப்பட்ட மதுவில் எதிராளியைத் திட்டமிட்டு கொலைசெய்ய விஷம் கலந்த சம்பவம் நாகர்கோவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சென்னை எம்ஐடி-க்கு வெடிகுண்டு மிரட்டல்..! அடுத்தடுத்து வரும் மிரட்டல்களால் பொதுமக்கள் அச்சம்..!