தஞ்சாவூர்: இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஈத்-உல்-அதா என்று அழைக்கப்படும் பக்ரீத் திருநாள் ஆகும். தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை, இறைதூதரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் அனைவரையும் நேசிக்க வேண்டும், இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும், தியாகம் செய்ய வேண்டும் என்பது முன்னிறுத்தபடுகிறது. பக்ரீத், தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் காரணம் இப்ராஹிம் இறைதூதர், தனது மகன் இஸ்மாயிலை அல்லாஹ்வுக்கு தியாகம் செய்ததன் நினைவாக கொண்டாடப்படுகிறது. மேலும் புனித ஹஜ் யாத்திரை முடியும் நாளை, பக்ரீத் பண்டிகை என்றும், ஹஜ் பெருநாள் என்றும் கொண்டாடுகின்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. திருச்சியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் இஸ்லாமிய பெருமக்கள் 500க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காதர்பேட்டை ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இன்று காலை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் சார்பில் கும்பகோணம் மேலாக்காவேரி சர்வமானியத் தெருவில் நடைபெற்ற கூட்டுத் தொழுகையில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் முஷிபூர் ரஹ்மான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, "இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டினை, 7 சதவீதமாக அதிகரித்து வழங்கிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். மத்திய பிரதேசத்தில், இஸ்லாமியர்கள் வீட்டில் பசுமாடு வளர்த்தார்கள் மற்றும் மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்பதற்காக, அவர்களது வீடுகள் இடிக்கப்பட்டது மிகவும் கவலை தருவதாக உள்ளது.
பாஜகவின் இத்தகைய அராஜக போக்கு தொடராமல் இருக்க நிதீஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் தங்களது ஆதரவை விலக்கி கொள்ள வேண்டும். தொடர்ந்து ஒராண்டிற்கு திட்டமிடப்பட்ட ஏகத்துவ பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தஞ்சையில் காணாமல் போன இளைஞர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு! போலீசார் விசாரணை! - Thanjavur YOUNGSTER death case