மதுரை: மதுரையின் மாபெரும் பண்பாட்டு, ஆன்மீக அடையாளமாகத் திகழும் உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளுதல், தமிழகத்தில் கொண்டாடும் பெருவிழாக்களில் ஒன்று. மதுரை மட்டுமன்றி, அண்டை மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து பல ஆண்டாண்டு காலமாக மாட்டு வண்டியில் வருகை தந்து சித்திரைத் திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்றுச் செல்வர்.
சகல வசதிகளையும் கொண்டதாக அந்த மாட்டு வண்டி அமைந்திருக்கும். ஏறக்குறைய 10-15 நாட்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறி அவற்றுடன் உப்புக்கண்டம் போட்ட கறித்துண்டுகளும் இருக்கும். அது ஒரு கனாக்காலமாக மாறிவிட்ட நிலையில், தற்போது வேன்களில் வந்து சித்திரைத் திருவிழாவில் பங்கேற்பதையும் காண முடிகிறது.
மதுரை மாவட்டம் தல்லாகுளம், தமுக்கம் மைதானம் அருகே தங்கள் வேனை நிறுத்திவிட்டு, அருகே பந்தி போட்டு அமர்ந்து காலை உணவைச் சுவைத்துக் கொண்டிருந்தனர், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவிலுள்ள புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள்.
அவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, சிவக்குமார் என்ற இளைஞர் கூறுகையில், "அழகர்மலையானைத் தரிசிப்பதற்காக ஒவ்வொரு சித்திரை பௌர்ணமியன்று வருவது வழக்கம். எங்களது முன்னோர்கள் தொன்று தொட்டுக் கடைப்பிடித்து வந்த இந்தப் பாரம்பரியம் சில ஆண்டுகளாக விடுபட்டுவிட்டது.
ஆகையால், கடந்த ஆண்டில் இருந்து நாங்கள் இந்த வழக்கத்தை மீண்டும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளோம். முந்தைய காலத்தில் வண்டி மாடு கட்டி நடைப்பயணமாக எங்களது முன்னோர்கள் மதுரைக்கு வந்தனர். இப்போது நாங்கள் வேன் பிடித்து வருகிறோம்" என்று காலமாற்றத்தை எடுத்துரைத்தார்.
புளியங்குடி கிராமத்திலுள்ள சிவகாளியம்மன் கோயிலின் பரம்பரை பூசாரிக் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50ல் இருந்து 60 பேர் வரை இரண்டு அல்லது மூன்று வேன்களில் அழகருக்கு நேர்ந்துவிட்ட காளை மாட்டோடு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த கூத்தாயி என்ற பெண் இது குறித்துக் கூறுகையில், "அழகருக்காக நேர்ந்துவிட்ட சிவகாளியம்மன் கோயில் காளையை ஒவ்வொரு ஆண்டும் அழைத்து வந்து அழகரிடம் காண்பித்துவிட்டு, மீண்டும் எங்கள் கிராமத்திற்குக் கொண்டு செல்வோம். அங்கு அதை ஒருபோதும் கட்டிப் போட மாட்டோம். வைகையாற்றில் அழகர் இறங்குவதைப் பார்த்துவிட்டு ஊர் திரும்புவோம்' என்கிறார்.
அவரைத் தொடர்ந்து கருப்பையா என்பவர் கூறுகையில், "நாங்கள் 50 பேர் வந்துள்ளோம். இது எங்கள் முன்னோர் ஆரம்பித்து வைத்தது. இடையில் சின்ன மன வருத்தம் காரணமாக இந்த மரபைத் தொடர முடியாமல் போய்விட்டது. தற்போது கடந்த ஆண்டில் இருந்து மீண்டும் இதனை மேற்கொண்டு வருகிறோம்.
எங்களது பூசாரி சிவாவுக்கு அருள்வந்து மீண்டும் அழகரைக் காணச் செல்ல வேண்டும் என்று கூறியதால், தொடர்ந்து வருகை தருகிறோம். வரும்போது மூன்று அல்லது நான்கு கிடாக்களையும் கொண்டு வந்து அழகர், கருப்பணசாமிக்குப் படையல் செய்து, அனைவருக்கும் அன்னதானம் செய்வோம். அழகர் மலையில் இருந்து கிளம்பி, மீண்டும் மலைக்குச் செல்வதுவரை அவரை வழியனுப்பிவிட்டு ஊர் திரும்புவது எங்கள் வழக்கம்" என்கிறார்.
இதில் பெண்கள், குழந்தைகள் அதிகம் இருக்கின்ற காரணத்தால், தங்கும் இடத்திற்கு அருகேயுள்ள விடுதிகளில் அவர்களுக்கு மட்டும் அறை எடுத்துத் தங்க வைக்கின்றனர். அழகர்மலையில் உள்ள ராக்காச்சி அம்மன் கோயிலில் தீர்த்தமாடிய பிறகு இவர்களது பயணம் தொடர்கிறது.
அதன் பிறகு கீழே பெருமாள், பதினெட்டாம்படி கருப்பணசாமி, தல்லாகுளம் கருப்பணசாமி, வண்டியூர் வீரராகவப் பெருமாள் என்று அனைத்துத் தெய்வங்களையும் வணங்கி கள்ளழகரின் தசாவதார நிகழ்வு, பூப்பல்லக்கு என அனைத்து நிகழ்வுகளிலும் பங்கெடுத்துவிட்டு தங்களது கோயில் காளையோடு ஊர் திரும்புகின்றனர்.
தங்களது முன்னோர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து அழகரைத் தரிசித்து ஊர் திரும்புவதை, தங்களது ஆன்மீகக் கடமையாகக் கொண்டுள்ளனர் முதுகுளத்தூர் தாலுகா புளியங்குடி கிராம மக்கள்.
இதையும் படிங்க: தங்கப்பல்லக்கில் மதுரை வந்த கள்ளழகர்..! கோவிந்தா..என ஆரவாரத்துடன் எதிர்சேவை செய்த பக்தர்கள்.. விழாக்கோலம் பூண்ட மதுரை