திருநெல்வேலி: உதவி புவி இயற்பியலாளர் பணியிடங்களுக்கு தங்களை நியமிக்க கோரி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், சுனாமி பாதிப்புகளுக்கு பிறகு கடந்த 2007-ஆம் ஆண்டு புவி தொழில்நுட்பவியல் துறை புதிதாக துவங்கப்பட்டது. இத்துறையின் மூலம் பயன்பாட்டு புவி இயற்பியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் படித்த மாணவர்கள் தமிழக அரசின் நீர்வளத்துறையில் காலியாக உள்ள உதவி புவி இயற்பியலாளர் பணியிடங்களுக்கு தங்களை தகுதியானவர்களாக அறிவித்து காலியிடங்களை நிரப்ப கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசின் நீர்வளத்துறையில் 46 ஆண்டுகளாக காலியாக உள்ள உதவி புவி இயற்பியலாளர் பணியிடங்களுக்கு தங்களை நியமிக்க கோரி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு படித்துள்ள புவி இயற்பியல் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் மனு அளித்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் பட்ட சான்றிதழை அரசிடம் ஒப்படைக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மாணவி இந்து பாலா கூறுகையில், “இதுவரை தமிழகத்தில் உதவி புவி இயற்பியலாளர் பணியிடங்கள் இல்லை என்று நினைத்தோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தமிழக அரசின் நீர்வளத்துறையில் உதவி புவி இயற்பியலாளர் பணியிடத்திற்கு 18 காலி இடங்கள் இருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: இரும்பு கட்டில் கால் உடைந்து விழுந்த விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு.. திண்டுக்கல்லில் சோகம்
இது குறித்து மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இது தொடர்பாக மாணவர்கள் இணைந்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கில் நீர்வளத்துறை செயலாளர், உதவி புவி இயற்பியலாளர் பணியிடங்களுக்கு மண்ணியல் (geology) மற்றும் பயன்பாட்டு மண்ணியல் பாடப் பிரிவில் முதுகலை பட்டம் படித்த மாணவர்கள்தான் தகுதியானவர்கள் என்று தெரிவித்தார். உண்மையான தகுதி கொண்ட எங்களை தகுதி இல்லாதவர்கள் என அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் மற்ற மாநிலங்கள் அனைத்திலும் புவி இயற்பியல் படித்த மாணவர்கள், உதவி புவி இயற்பியலாளர் பணியிடங்களுக்கு அரசு நியமித்து வருகிறது. இயற்பியல் படித்த மாணவர்கள் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஐஐடி போன்ற உயரிய துறைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். தமிழக அரசு இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, காலியாக உள்ள உதவி புவி இயற்பியலாளர் பணியிடங்களுக்கு தங்களை தகுதியானவர்களாக அறிவித்து காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இல்லையென்றால், விரைவில் தங்களது முதுநிலை பட்டப்படிப்பு சான்றிதழை மாவட்ட ஆட்சியிடம் திரும்ப ஒப்படைப்போம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்