சென்னை: கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாகக் கூறி, வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட ஏழு பேர் மீது பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கரூர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவரது சகோதரர் சேகரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல்துறையினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், தங்களிடம் விசாரணை நடத்த எந்த அவசியமும் இல்லை என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த மனுக்கள் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதேபோன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு மதுரைக்கிளையில் மனுத்தாக்கல்!