திருச்சி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பீப் சவுண்ட் தாமதமாக வருவதாக திமுக எம்பி திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில், வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் திமுக எம்பி திருச்சி சிவா, தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து எம்பி திருச்சி சிவா கூறியதாவது, “வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரத்தில் தாமதமாக பீப் சவுண்ட் வருவதால் வாக்குப்பதிவு கொஞ்சம் மெதுவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஜனநாயக நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களைப் பற்றியும், தங்களுக்குச் சாதகமான சூழல் பற்றியும் பேசுவார்கள். கருத்துக் கணிப்புகள் கடமையாக வரும்போது முடிவைத் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். கருத்துக் கணிப்பு என்பது முழுமையாக சரியாக இருப்பதில்லை. மக்களுடைய மனநிலையை உணர்வது தான் உண்மையான கருத்துக் கணிப்பாக இருக்க முடியும்.
ஒவ்வொரு தேர்தலிலும் மக்களின் தீர்ப்பு சரியாக இருந்திருக்கிறது. இந்த தேர்தலில் இந்திய நாட்டு மக்கள் மீது குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட பரந்த நாட்டில், 100 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அந்தந்த மாநிலங்களில் உள்ள சூழ்நிலையைப் பொறுத்து ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும், தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணிகளை செயல்படுத்துவதில் நெருக்கடி இருக்காது. குறிப்பாக, தமிழ்நாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேலாக பணம் கொண்டு செல்ல முடியாது என்ற விதிமுறை தளர்த்தப்பட வாய்ப்புள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: வாக்குச்சாவடிக்கு செல்போனுடன் செல்லலாமா? கெடுபிடி காட்டும் போலீசார் - Lok Sabha Election 2024