தூத்துக்குடி: கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி, காமராஜர் பிறந்தநாளான இன்று தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள விவிடி நினைவு ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தூத்துக்குடி எம்பி கனிமொழி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி எம்பி கனிமொழி பேசுகையில், "முதலமைச்சர், காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறக்கூடிய பள்ளிகளில் இன்று தொடங்கி இருக்கின்றார். இந்த காலை உணவு திட்டம் அரசுக்கு மிகப்பெரிய சாதனையாகும்.
இந்தியாவில் யுனிசெப் (UNICEF) கணக்கின்படி, உணவு கிடைக்காத காரணத்தால் ஒவ்வொரு நாளும் 3,000 குழந்தைகள் இறக்கின்றார்கள் என்ற வருத்தமான செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் நம் பிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வளர்ச்சிக் குறைபாடுகள் இல்லாத ஒரு மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்பதற்காகக் கொண்டு வந்து இருக்கக் கூடிய இந்த திட்டத்தை தூத்துக்குடியில் அறிமுகப்படுத்தி இருக்கின்றோம் என்பதில் மகிழ்ச்சி. அதேபோல, இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்திருக்கக் கூடிய முதல்வருக்கு நன்றி" என தெரிவித்தார்.
முன்னதாக, காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளியில் அலங்கரிக்கப்பட்ட காமராஜர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி 546 ஆகும். இதில், 12 வட்டங்களில் மொத்த மாணவர்கள் 20 ஆயிரத்து 848க்கு இன்று காலை உணவுத் திட்டத்தைத் தொடங்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்கம்!