கோயம்புத்தூர்: கோவை சரவணம்பட்டி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டங்களைத் துவக்கி வைத்து நலத் திட்டங்களை வழங்கினார். மேலும், அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, நீலகிரி எம்.பி ஆ.ராசா, கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் உட்பட அரசு அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் மேடையில் உரையாற்றிய நீலகிரி எம்.பி ஆ.ராசா, "இந்த நிகழ்ச்சி மலைப்பாகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நானும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் அனைவரும் கலைஞருடன் பயணித்தவர்கள். இன்றைய முதலமைச்சர் உடனும் பயணித்துக் கொண்டிருப்பவர்கள். அந்த வகையில், தற்பொழுது தம்பி உதயநிதியுடனும் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் ஸ்டாலின். அன்றைக்கு அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகளை எல்லாம் கலைஞரிடம் கூறுவோம். அப்படிக் கூறும் போது, 'கலைஞர் நீங்கள் மூலவர், உற்சவராகத் தளபதி (மு.க.ஸ்டாலின்) சென்று கொண்டிருக்கிறார்' என கூறுவோம்.
தற்போது அதன் தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைப் பெறுகின்ற காரணத்தினால் மூலவராக மு.க.ஸ்டாலின் அங்கே அமர்ந்திருக்கிறார்; உற்சவராக விளையாட்டுத்துறை அமைச்சர் இங்கு வந்திருக்கிறார். பெரம்பலூருக்கு 300 கோடி ரூபாய் குடிநீர் திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு செய்து தர வேண்டும்" என ஆ.ராசா தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா விவாதம்; நீட் விலக்கு குறித்து கேள்வி எழுப்பிய திமுக எம்பி வில்சன்!