“திருமாவளவன் எப்படி தலித் மக்களுக்கான தலைவராக முடியும்?” - எல்.முருகன் கேள்வி! - MINISTER OF STATE L MURUGAN
விசிக தலைவர் திருமாவளவன் சமூக நீதியைப் பற்றி பேச அருகதை கிடையாது எனவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு ஆளுநர் மீது குற்றம் சாட்டுகிறார் எனவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Published : Oct 20, 2024, 5:21 PM IST
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே பாஜக அமைப்புசாரா ஓட்டுநர்கள் பிரிவு சார்பாக, ஆட்டோ ஓட்டுநர்கள் கொண்டாடிய ஆயுத பூஜை விழாவில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக அமைப்புசாரா ஓட்டுநர்களுக்கு குக்கர் மற்றும் இனிப்பு வகைகளை இணையமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.
பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது: பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “இன்று எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜை விழாவைக் கொண்டாடினர். தமிழகம் முழுவதும் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் எடுத்துக்காட்டாகத் தான் இன்று ஆட்டோ சங்கத்தினர் ஆயுத பூஜையைக் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கையும் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆன்மீகம் மற்றும் தேசத்தின் பக்கம் மக்கள் நிற்கிறார்கள்.
திட்டமிட்டு ஆளுநர் மீது குற்றச்சாட்டு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு ஆளுநர் மீது குற்றச்சாட்டை வைக்கிறார். திமுக மற்றும் காங்கிரஸினுடைய இளைஞர் அணி சார்ந்த மாணவர் போராட்டத்தை மேற்கொள்கின்றனர். இந்த விழாவை ஒரு சர்ச்சையாக்க வேண்டும் என செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த விழாவில் ஆளுநர் சிறப்பாக உரையாற்றி இருக்கிறார். பாடியவர்கள் தவறாக பாடி உள்ளனர். அவர்கள் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். அதற்காக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல.
தமிழுக்கு பெருமை சேர்க்கிறார் பிரதமர்: திருவள்ளுவருக்கு கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று சொல்லி இருந்தோம். பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் தான் ஆகி இருக்கிறது. அதற்குள் நான்கு இடத்தில் அமைத்து இருக்கிறோம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழர்களின் அடையாளமான செங்கோல் நிறுவி, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் பிரதமர் மோடி. தமிழுக்கும், தமிழ் மொழிக்கும் பிரதமர் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் பாஜக தமிழுக்கு எதிரானது போல் கருதாக்கத்தை உருவாக்க திமுக முயற்சி செய்து வருகிறது.
இதையும் படிங்க: "இந்தியாவின் வளர்ச்சிக்கு அரசு மட்டும் காரணமில்லை" -ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
மக்களை திசை திருப்பும் முயற்சி: திமுக அரசாங்கம் சென்னை வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. யாரும் இந்தியை திணிக்கவில்லை, கட்டாயப்படுத்தவில்லை. விரும்பினால் இன்னொரு மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று தான் எடுத்துச் சொல்கிறது. சென்னையை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும். வேளச்சேரி பகுதியில் இன்றும் தண்ணீர் நிற்கிறது. மக்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பதை விட்டு விட்டு, மக்களை திசை திருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகிறது.
ஆளுநர் தன் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். உண்மையைப் பேசிக் கொண்டிருக்கிறார். உண்மையைச் சொல்லும் பொழுது திமுக தலைவர்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் கசப்பை கொடுத்து விடுகிறது. அந்தக் கசப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். கூவத்துக்குள்ளாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வீடு கட்டுகிறது. சதுப்பு நிலக் காடுகள் பகுதிகளில் தற்பொழுது வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மொழியை வைத்து மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறது திமுக.
இரட்டை வேடம் போடுகிறார் திருமா: சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த திருமாவளவன் எப்படி மொத்த தலித் மக்களுக்கான தலைவராக இருக்க முடியும்? திருமா எப்படி தலித் தலைவர்களாக இருக்க முடியும்? அவர் இரட்டை வேடம் போட்டுக் கொண்டுள்ளார். விசிக என்பது ஒரு சின்ன கட்சி. அதனை நான் சிறிய கட்சியாக பார்க்கிறேன். திருமாவளவன் முதலமைச்சர் ஆகுவது என்பது நடக்காது” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்