சென்னை: சென்னை ஐஐடியின் 61வது பட்டமளிப்பு விழா ஐஐடி வளாகத்தில் உள்ள அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 2012ஆம் ஆண்டு வேதியியலில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவின் உயிர்வேதிநுட்ப அறிவியலாளர் பிரயன் கே.கோபில்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
சென்னை ஐஐடி நிர்வாகக் குழு தலைவர் பவன் கோயங்கா தலைமையில், சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் 764 பேருக்கு பி.டெக் (27 பேர் ஹானர்ஸ்), 277 பேருக்கு பிடெக் மற்றும் எம்டெக் இரட்டைப் பட்டங்கள்.
481 பேருக்கு எம்.டெக், 151 பேருக்கு எம்.எஸ்சி, 42 பேருக்கு எம்.ஏ., 50 பேருக்கு எக்சிகியூடிவ் எம்.பி.ஏ., 84 பேருக்கு எம்.பி.ஏ., 236 பேருக்கு எம்.எஸ்., பி.எச்.டி, 444 பேர் என 2,636 பட்டதாரிகளுக்கு சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி பட்டங்களை வழங்கினார். இதில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருத்தினர் பிரயன் கே.கோபில்கா பேசும் போது, "நோபல் பரிசு பெற்றதில் எனது வெற்றிக்கு காரணமாக 5 காரணிகளை பார்க்கிறேன். எனது மனதுக்கு பிடித்த, விரும்பிய பணியைச் செய்தேன். சிறந்த வழிகாட்டிகளை பின் தொடர்ந்தேன். நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரும் ஒத்துழைப்பை வழங்கினர். எனது வாழ்வில் ஆராய்ச்சிக்கும், குடும்பத்திற்கும் சமமான நேரத்தை வழங்கினேன். தோல்வியைக் கண்டு பயப்படவில்லை. இதனால் 21 ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்றேன்.
எனது முதல் வழிகாட்டி எனது தந்தை. எனது பெற்றோர் என்னைச் சிறப்பாக வழிநடத்தினர். எனது அப்பா ஒரு சிறிய பேக்கரி வைத்து நடத்தினார். மக்களைச் சந்திப்பது, உரையாடுவது, அவரின் நகைச்சுவை திறன் ஆகியவை எனக்கு பிடிக்கும். இரவு பகலாக பேக்கரியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அவரது நிர்வாகத்திறனை எனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினேன். தற்போது உலகில் மிக சவாலாக இருப்பது வைரஸ் அதிகரிப்பு.
மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகள் இருக்கின்றன. 850 மில்லியன் மக்கள் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கும். அறிவியல் மற்றும் மருத்துவத்தில் ஏஐ பெரும் சவாலாக இருக்கும். மாணவர்களாகிய நீங்கள் இந்த சவால்களை எதிர்கொள்வீர்கள். நீங்கள் தேர்வு செய்யும் பணியில் வெற்றி அடைய வாழ்த்துகள்" என்றார்.
இரட்டை பட்டப் படிப்பில் பாடத்திட்டம் மற்றும் பாடநெறிக்கு புறம்பான செயல்பாடுகளில் சிறந்த அனைத்து சுற்று நிபுணத்துவத்திற்காக ஆளுநர் விருது பெற்ற மாணவர் தனஜெய் பாலகிருஷ்ணன் பேசும் போது,"பாலஸ்தீனத்தில் இனப் படுகொலை நடைபெறுகிறது. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போரை நடத்தக்கூடிய நாடுகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி செய்கிறது.
தொழில் நுட்ப வளர்ச்சிகள் மகிழ்ச்சியைத் தந்தாலும் இது போன்ற அழிவுக்கு பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அறிவியல் பின்புலத்தில் இருக்கும் மாணவர்களாகிய நாம் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்ல உள்ளோம். பெரு நிறுவனங்கள் நம்மை எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை விழிப்புடன் பார்க்க வேண்டும்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்