புதுக்கோட்டை: அருந்ததியினருக்கான 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வரவேற்றுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு சார்பில் சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழி பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது? என்னென்ன பணிகள் முடிவடைந்துள்ளது என்பது குறித்து, தமிழ்நாடு அரசு சட்டமன்ற உறுதிக்குழு தலைவர் வேல்முருகன் ஆய்வு செய்ய வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீட்டை வரவேற்கிறோம் என்றார்.
மேலும், சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க மாநில அரசு தயங்கவில்லை.. முழு விவரப்பட்டியல் மத்திய அரசு கையில் இருப்பதால், மத்திய அரசுதான் இதை செய்ய வேண்டுமென மாநில அரசு கூறுகிறது. இருப்பினும், பீகார், ஆந்திர மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இதுவரை தமிழக முதல்வர் அதனை மறுக்கவில்லை என வேல்முருகன் கூறினார்.
இதையும் படிங்க: முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு எப்போது? - அமைச்சர் சேகர்பாபு முக்கிய தகவல்!
அத்துடன், சாதி வாரி கணக்கெடுப்புக்கான ஒருங்கிணைப்பு குழுவை விரைவில் தமிழக முதல்வர் அழைத்து பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்த வேல்முருகன், சட்டப்பேரவை உறுதிமொழி குழு சார்பாக கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரம் குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோரை அழைத்து பேசினோம் என்றார்.
மேலும், அதன் அடிப்படையிலே தான் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்று விரைவாக அரசு கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனை கட்டுப்படுத்தி வருகிறது. சட்ட விரோத விற்பனைகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தமிழகத்திலிருந்து கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் வஸ்துகளை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்