விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த கிருஷ்ணன்கோயிலில் இன்று (மார்.27) நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு வாக்கு கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “சமீபத்தில், மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் என்று உடனடியாக சிலிண்டர் விலையை பிரதமர் குறைத்தார். வருடா வருடம்தான் மகளிர் தினம் வருகிறது. அப்போதெல்லாம் இதுபோன்று குறைத்தாரா? இல்லையே, அப்போதெல்லாம் இந்திய நாட்டு மகளிரும், இந்தியக் குடும்பங்களும் படும் கஷ்டம் அவர் கண்ணுக்குத் தெரியவில்லையா? இப்போது தேர்தல் வந்ததும் குறைக்கிறார். என்னவொரு கருணை உள்ளம் அவருக்கு, தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான உள்ளம்.
மோடி பிரதமராகப் பொறுப்பேற்பதற்கு, 2013-க்கு முன்னால், சிலிண்டர் விலை எவ்வளவு? 410 ரூபாய். பத்து ஆண்டுகள் கழித்து, 2023-இல் சிலிண்டர் விலை 1,103 ரூபாய். ஐந்து மாநிலத் தேர்தல் வந்தது. கூடவே மோடிக்கு இரக்கமும் வந்தது. சிலிண்டர் விலை குறைந்தது, இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது, அதனால் 100 ரூபாய் குறைத்திருக்கிறார். தேர்தலுக்கு தேர்தல் மட்டும் விலை குறைப்பு செய்வது ‘பச்சோந்தி அரசியல்’ இல்லையா? 410 ரூபாய் இருந்த சிலிண்டரை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்த்தியதுதான் உங்களின் சாதனை. தேர்தல் வந்ததால் சிலிண்டர் விலையை மட்டுமல்ல, பெட்ரோல் - டீசல் விலையையும் குறைக்கிறார். விலை குறைப்பு என்பது மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி நடத்தும் நாடகம். அவரது நாடகங்களை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட பிரமதமர் மோடியை நீங்கள் நம்புகிறீர்களா? மக்கள் யாருமே அவரை நம்பவில்லை. உடனே மக்களை நம்ப வைக்க இப்போது புதிய விளம்பரம் ஒன்று செய்கிறார், என்ன தெரியுமா? தாய்மார்கள் இங்கு நிறைய பேர் வந்திருக்கிறீர்கள், ஒரு மிக்சி விளம்பரம் வருமே நினைவு இருக்கிறதா? “ப்ரீத்திக்கு நான் கேரண்டி” என்று ஒரு விளம்பரம், அந்த மாதிரி இவர், “இது மோடியின் கேரண்டி” என்ற புதிய விளம்பரத்துடன் வந்திருக்கிறார். உண்மையில் அவரின் வாக்குறுதிகளுக்கு, கேரண்டியும் இல்லை! வாரண்டியும் இல்லை! பிரதமராக நாட்டு மக்களுக்கு நல்லது செய்யச் சொன்னால், பத்தாண்டுகளாகச் சொன்ன எதையுமே செய்யாமல், சேல்ஸ்மேன் மாதிரி கேரண்டி என்று விளம்பரம் செய்த உங்களுக்கு வெட்கமாக இல்லை? அவரின் கேரண்டிகளின் லட்சணம் என்ன?
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் போடலாம் என்று சொன்னாரே? 15 இலட்சம் இல்லை, 15 ஆயிரமாவது மக்களுக்கு கொடுத்தாரா? 15 ரூபாயாவது கொடுத்தாரா? அதுமாதிரியான கேரண்டியா?
தேர்தலுக்குத் தேர்தல் நீங்கள் வெறும் வாயால் வடை சுடுவீர்கள் என்று மக்களுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே செய்யாமல், பத்து ஆண்டில் ஒரு சிறப்புத் திட்டத்தைக்கூட நிறைவேற்றாமல், அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட கட்டத் தொடங்காமல், பேரிடர் நேரத்தில் நிதி தராமல், ஒரு இரங்கல்கூட சொல்லாமல், இப்போது தேர்தல் நேரத்தில் மட்டும் இங்கு அடிக்கடி வாக்கு கேட்டால், உங்களுக்கு ஆதரவு தர நாங்கள் ஏமாளிகளா” என்றார்.