சேலம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று (ஜன.21) திமுக 2வது இளைஞரணி மாநாடு வெகு விமரிசையாக நடந்தது. இம்மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”கடல் போல் திரண்டுள்ள திராவிட பட்டாளமே உங்களை வீரபாண்டியாருடைய மாவட்டமான சேலத்தில் ஒருசேர பார்க்கும்போது மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் பிறக்கிறது. தெற்கில் விடியல் பிறந்தது போல், இந்திய நாடு முழுவதும் விரைவில் விடியல் பிறக்கும்.
எனக்கு இந்த மாநாட்டால் 20 வயது குறைந்தது போல் ஒரு தெம்பு வந்துவிட்டது. கழகத்தின் பணிகளிலும், மக்கள் பணியிலும் உதயநிதி எனக்கு துணையாக மட்டுமல்லாது புனையாக இருக்கிறார். எனக்கு 30 வயது இருக்கும்போது, கலைஞர் இளைஞர் படையை உருவாக்கினார். அப்போது நாங்கள் அவரது நம்பிக்கையை பூர்த்தி செய்ததுபோல், இப்போது வெற்றிக் கொடி கட்டி, எனது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து இளைஞர் அணி செயல்பட்டு வருகிறது. எந்த கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கை விதைக்கும் மாநாடாக இந்த சேலம் இளைஞரணி மாநாடு அமைந்துள்ளது.
இளைஞரணி எனது தாய் வீடு. என்னை வளர்த்து, கழகத்திற்கு தொண்டாற்ற அடித்தளமிட்டது இந்த இளைஞரணி தான். இளைஞர்களால் உருவான போர் கருவி தான் இந்த ஸ்டாலின். இளைஞர்கள் பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழினத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். நூற்றாண்டு பழமை வாய்ந்த திராவிட கழக வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கலைஞர் என்பது உங்களுக்கு புரியும். அது மட்டுமில்லாது, தமிழினத்திற்கு எதிரான நாசக்கார சக்திகள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் வளத்திற்கும், நலத்திற்கும் ஆபத்து வந்துள்ளது. அதனை தடுப்பதற்காக இளைஞரணி மாநாட்டை மாநில உரிமை மீட்பு மாநாடாக நடத்துகிறோம். மொழி, தமிழ் பண்பாடு, மாநில மதிப்பை அழித்து நம்மை அடையாளம் இல்லாதவர்களாக மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. 10 ஆண்டுகள் தமிநாட்டை எல்லா வகையிலும் பாழ்படுத்திய கட்சி அதிமுக. இப்போது அதிமுக ஆடுகிற உள்ளே, வெளியே ஆட்டம் பாஜக போட்டு கொடுத்த நாடகம். பழனிசாமி போடுகிற பகல் வேஷத்தை அதிமுக தொண்டர்கள் கூட நம்புவதில்லை.
மாநிலங்களுக்கு போதுமான அதிகாரங்களை வழங்க வேண்டும் நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைபாட்டையும் பாதுகாக்கிற அதிகாரத்தை மட்டும் மத்திய அரசு வைத்து கொள்ள வேண்டும். 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்பது வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இந்தியாவின் முழக்கமாக மாறும். பாஜக ஆளும் மாநிலத்தில் கூட மாநில சுயாட்சி வேண்டும். இதனை திருச்சியில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மேடையிலேயே கூறினேன்' என்று பேசினார்.
மத்திய அரசுக்கு மாநில அரசுகள் ஏடிஎம்களா?: ஒரு காலத்தில் மாநில முதலமைச்சராக இருந்தவர் மோடி. ஆனால், இன்று மாநிலங்களை மொத்தமாக ஒழிக்கும் வேலைகளை மோடி செய்து வருகிறார். எந்த சட்டங்களைக் கொண்டு வந்தாலும் மாநில முதலமைச்சர்களை ஆலோசனை கேட்பதில்லை. நீட், ஜிஎஸ்டி ஆகியவை மூலம் மாநிலங்களின் அதிகாரங்களை முற்றிலுமாக பறித்து விட்டனர். மத்திய அரசுக்கு பணம் தரும் ஏடிஎம்களாக மாநில அரசை மாற்றிவிட்டனர். இயற்கை பேரிடர் காலத்தில் கூட நமக்கு உதவி செய்வதில்லை.
பொங்கல் கொண்டாடி, திருக்குறளை சொன்னாலும் தமிழர்களின் ஓட்டு கிடைக்காது: நிவாரணமாக, ரூ.37 ஆயிரம் கோடி பணம் கேட்டதற்கு இதுவரை ஒரு பைசா கூட வரவில்லை. திருக்குறள் சொன்னால் போதும், பொங்கல் கொண்டாடினால் போதும், அயோத்தியில் கோயில் கட்டினால் போதும் தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் இன்னும் நம்மை புரிந்து கொள்ளவில்லை. இது பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோருடைய மண்.
மோடிக்கு கடந்த இரண்டு முறை தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்கவில்லை. இந்த முறையும் வாக்களிக்க போவதில்லை. மத்தியில் ஆட்சியில் இருப்பதால் கட்சிகளை உடைப்பது, எம்எல்ஏக்களை இழுப்பது, ஆளுநர் மூலமாக குறுக்கு வழியில் ஆட்சி நடத்துவது போன்ற வேலைகளில் பாஜக ஈடுபடுகின்றனர். பாஜகவுக்கு வேட்டு வைக்க ஆளுநர்களே போதுமானது. நாம் உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி (INDIA Alliance) ஒற்றை கட்சி ஆட்சியாக இருக்காது, சர்வாதிகார ஆட்சியாக இருக்காது, கூட்டாட்சியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “ED-க்கும் பயப்படமாட்டோம்.. மோடிக்கும் பயப்படமாட்டோம்..” - உதயநிதி ஸ்டாலின்