சென்னை: தமிழக சட்டப்பேரவையில், இன்று (பிப்.13) ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக உயிரிழந்த முன்னாள் உறுப்பினர்கள், தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இது முடிந்த பிறகு, ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக மீண்டும் சபாநாயகரிடம் முறையிட்டார்.
அப்போது பேசிய அவர், "எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஒதுக்கித் தருமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். அதனை நிறைவேற்றித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், "எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ள இருக்கை விவகாரம் தொடர்பாக, மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு முன்பு இருந்த சபாநாயகர் தனபால் கூறிய விதியை பின்பற்றுவதாக நீங்கள் கூறியுள்ளீர்கள்.
ஆனால், தொடர்ந்து எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் கேட்டு வருவதால், அதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்தார். உடனடியாக இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எதிர்கட்சித் தலைவர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். அவரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒகேனக்கல்லில் புதிய புனல்மின் நிலையம் கொண்டுவர வாய்ப்புள்ளதா? - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்