சென்னை: சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 29) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதற்கு, பதிலுரை அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனை முற்றிலுமாக தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும், வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இக்குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதாகவும் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றவாளிகளின் 18 கோடியே ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான 46 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கள்ளச்சாராயத்தை போலவே போதை மருந்து ஒழிப்பில் காவல்துறை அதிகாரிகள் உறுதியாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாக தெரிவித்தார்.
போதைப் பழக்கங்களுக்கு எதிராக குற்ற தடுப்பு நடவடிக்கைகளை அரசு ஒரு பக்கம் எடுத்தாலும், இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அதிகம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கருதி, போதை மருத்தின் பாதிப்புகளை உணர்த்துதல், குடிநோயாளிகளை மீட்பது ஆகியவற்றை ஒரு இயக்கமாகவே அரசு நடத்தி வருவதாக தெரிவித்தார். அந்த இயக்கத்தை சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'இப்போ தெரிகிறதா'?.. சட்டென குறுக்கிட்ட துரைமுருகன்.. உடனே பிடிஆர் விட்ட சவால்!