சென்னை: இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் திருநெல்வேலி மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஜூன் 13 அன்று இருவேறு சமூகத்தைச் சார்ந்த மணமக்களுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைக்கப்பட்டதையடுத்து, மணப்பெண்ணின் குடும்பத்தினர் கடந்த ஜூன் 14 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று, இதுகுறித்துக் கேட்டு தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியிருக்கிற சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 7 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 7 ஆண்கள் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
விசாரணையில் இச்சம்பவத்தில் சாதிய வன்கொடுமை நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக தெரியவந்ததையடுத்து, இவ்வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளும் சேர்க்கப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாகவும், இதுபோன்று பதிவு செய்யப்படும் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு முறையான தண்டனை வாங்கித் தரப்படுகிறதாகவும் கூறினார்.
இதற்கென ஒரு சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதைவிட தற்போது இது போன்ற குற்றங்களுக்கு நடைமுறையிலுள்ள சட்டப்பிரிவுகள், குறிப்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது என்று இந்த அரசு கருதுவதாகவும், அந்த வகையில் சமீபத்தில் பல வழக்குகளில், அதிலும் கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற குற்றங்களில் கூட விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வாங்கித் தரப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட அரசுத் தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் (Special Public Prosecutors) நியமிக்கப்படுவார்கள் என்பதை அறிவித்தார்.
அதேபோல, தற்போது இதுபோன்ற குற்றங்களில் எல்லாம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி காவல் ஆய்வாளர் விசாரணை அலுவலராக நியமிக்கப்படுகிறார். ஆனால், இவ்வழக்குகளில் விசாரணையின் தன்மையை மேலும் தீவிரப்படுத்தும் வகையிலும் வேகப்படுத்தும் நோக்கிலும் விசாரணை அலுவலராக காவல் துணைக் கண்காணிப்பாளரை நியமிப்பது குறித்து சட்ட ஆலோசனையைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்தார்.
மேலும், இக்குற்றங்களைக் குறைக்கும் வகையில் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பதை பற்றியெல்லாம் மீண்டும் ஆய்வு செய்து, அதுகுறித்தும் தேவையான முடிவுகள் எடுக்கப்படும்” என உரையாற்றினார்.
இதையும் படிங்க: கருணாநிதியின் பெயரில் புதிய விருது.. சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு!