சென்னை: நடப்பாண்டிற்கான சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த பிப்.12ம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்த பொது விவாதம் சட்டப்பேரவையில் இன்றும், நாளையும் (பிப்.23) நடைபெறுகிறது.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று (பிப்.22) நடைபெற்ற வினாக்கள் விடைகள் நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, "நெல்லூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?" எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "ஆந்திரா பகுதியில் பறவை காய்ச்சல் பரவும் நிலையில் உள்ளதாக அறிந்தவுடன், கால்நடை பராமரிப்புத்துறைக்கு உடனடியாக உத்தரவிட்டு, அங்கிருந்து வரும் அனைத்து வண்டிகளும், பறவைகளும், கோழிகளும் தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது என்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்ற வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகிறது. தற்போது, தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவக்கூடாது என்பதற்கான தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு சார்பில் மேற்கொண்டு வருகிறார் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.27 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்!