தஞ்சாவூர்: தஞ்சை அடுத்த ஈச்சங்கொட்டையில் கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் எண்ணெய் பனை சேவை மையத்தை தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “கடன் வாங்குவது எப்போது முடியும் என்று தெரியவில்லை. எப்பொழுது, கடன் தேவையில்லை என்ற நிலை வருகிறதோ அன்றைக்கு திமுகவின் பணி வெற்றியடைந்ததாக முதலமைச்சர் கருதுவார். விவசாயிகள் கடன் வாங்குவதை நிறுத்துங்கள். கடன் வாங்கும் தேவை எப்போது நிற்கிறதோ அன்றுதான் விவசாயிகள் வளர்வார்கள்.
மதிப்புக் கூட்டுதலில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. எடிபிள் ஆயில் (Edible Oil) 60 சதவீதம் மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறோம். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தண்ணீரின் தேவையையும் குறைக்க வேண்டும். நிலத்தடி நீரின் தேவைக்கேற்ப பாமாயில் எண்ணெய் சாகுபடிக்கு சென்றால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது.
டெல்டா மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. பாமாயில் எண்ணெய் பனை விவசாயிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளும் இந்த மையத்தில் வழங்கப்படும். சாகுபடி பயிற்சி தொடங்கி கடன் உதவி வரை அனைத்து சேவைகளும் வழங்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கோத்ரேஜ் நிறுவன அதிகாரிகள் சவுகதா நியோகி, ராகேஷ் சுவாமி மற்றும் தஞ்சை தொகுதி எம்பி முரசொலி உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடி மாற்றம்.. புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம்! - Chennai City police Commissioner