திருநெல்வேலி: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்யும் நேரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் சூறாவளியாகச் சுழன்று வருகின்றனர். இந்த நிலையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார்.
தற்போது அவருக்கு ஆதரவாக, தொகுதி முழுவதும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகப் பாளையங்கோட்டை பகுதியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மேலும், பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை முன்பு துவங்கி தெற்கு பஜார், ராஜகோபாலசாமி கோவில் வீதி, மார்க்கெட் பகுதி, சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று, திமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். தொடர்ந்து, மார்க்கெட் பகுதியில் வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு வியாபாரிகள் ஆகியோரிடமும் ஆதரவு திரட்டினர்.
அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "விடுதலைக்குப் பின்பு தற்போது இந்திய நாடு மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு காரணமான பாஜக அரசை வீழ்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்திய கூட்டணியை உருவாக்கக் காரணமாக இருந்தார். கரோனா பாதித்தபோது திமுக அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. அதேபோன்று நெல்லை பகுதி முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தபோது திமுக அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6 ஆயிரம் ரூபாயும், வீட்டை இழந்தவர்களுக்கு ரூ.4 லட்சமும் வழங்கியது.
இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கரோனா காலகட்டம், மழை வெள்ள பாதிப்புகளில் நீங்கள் சிக்கிய போது ஓடோடி வந்து உங்களின் பாதுகாவலாக நின்றவர் மு.க.ஸ்டாலின். எனவே இதை மறந்து விடாமல் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸிக்கு கைச் சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.