சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ஆம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகலை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்,செந்தில் பாலாஜிக்கு வழங்கியது.
இந்த நிலையில் வழக்கின் அடுத்தகட்டமாகக் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று (ஜன.22) ஆஜர்படுத்தும்படி சிறைத்துறைக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களுக்கும் பதில் அளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி 29ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார். அதேபோல் நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக மட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காணொளி காட்சி மூலம் இன்று ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து புழல் சிறையிலிருந்து செந்தில் பாலஜியின் காணொலி காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 16வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசியல் கலந்த ஆன்மீகத்தை நிர்மலா சீதாராமன் செய்கிறார் - அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!