சென்னை: கடந்த 2011 - 2015ஆம் ஆண்டுகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சஞ்சய் பாபா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ஆஜராகி இருந்தனர். வழக்கில் 2,222க்கும் மேற்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், முதல் 100 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: அரிசி மூட்டைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.15 லட்சம்.. தெரியாமல் விற்ற மச்சான் - கடலூரில் பரபரப்பு!
அவர்களின் சிலர் இன்றைய விசாரணைக்கு ஆஜராகாததை அடுத்து அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட மேலும் 50 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் வழக்கின் விசாரணையை நவம்பர் 25ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
முன்னதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்மையில் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்