சென்னை: சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நினைவாக மரக்கன்று நடும் விழா இன்று நடைப்பெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “திருவண்ணாமலை நிலச்சரிவை தொடர்ந்து பல கட்ட ஆய்வுகள் அண்ணாமலையார் மலையில் நடத்தப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் நானும், அமைச்சர் எ.வ.வேலுவும் கள ஆய்வில் ஈடுப்பட்டோம். அதற்கு முன்னர் அண்ணா பல்கலைகழக புவியியல் ஆய்வாளர் சரவண குமார் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.
தற்போது திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் கார்த்திகை மகா தீபத் திருவிழானது வருகிற டிச.13ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று அங்கு கொப்பரை தேங்காவில் மெகா சைஸ் திரி வைக்கப்பட்டு, எண்ணெய் மற்றும் நெய்யில் ஊர வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு தரிசனங்கள் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: திருச்சி மலைக்கோட்டை கார்த்திகை தீபத் திருவிழா: மெகா சைஸ் திரி கொப்பறையில் ஏற்றப்பட்டது!
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தோம். இருந்த போதிலும் நிகழ்வுக்கு முந்தைய நாள் மலையின் மையத்திற்கு கீழே உள்ள மலை சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று திருவண்ணாமலை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் மண் இயக்கவியல் மற்றும் அடித்தள பொறியியல் துறை பேராசிரியர் பிரேமலதா, புவியியல் மற்றும் சுரங்க துறை மண்டல கூடுதல் இயக்குனர் ஆறுமுக நயினார், புவியியலர்கள் ஜெயபால், புவியியல் மற்றும் சுரங்கத் துறை கூடுதல் இயக்குனர் சங்கரராமன், லட்சுமி ராம் பிரசாத், சுரேஷ்குமார்,அருள் முருகன், தமிழரசன் உள்ளிட்டோர் ஆய்வு பணியில் உள்ளனர்.
விரைவில் இவர்கள் மலை மற்றும் மண்ணின் நிலவரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிப்பார்கள். அதை வைத்து ஆலோசனை நடத்தப்படும். அதன்பிறகுதான், கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்க வேண்டும் இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.