சென்னை: கொளத்தூர், அகரம் ஜெகந்நாதன் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் முதல்வர் படைப்பகத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது; மக்களின் அடிப்படை வசதிகளை கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். பெண்களுக்கு அனிதா பெயரில் கட்டணம் இல்லாமல் கணினி பயிற்சி மையத்தை உருவாக்கினார்.
ஆண்களுக்கு கட்டணம் இல்லாமல் கணினி பயிற்சி மையத்தை உருவாக்கினார். தொடர்ந்து, மடி கணினிகளை இந்த மாணவர்களுக்கு வழங்கி வருகிறார். பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வருபவர் நம்முடைய முதல்வர்.. அனிதா கணினி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவிகள் 105 பேருக்கும், தையல் பயிற்சி மையத்தில் பயின்று வரும் 360 பேருக்கும் தையல் இயந்திரத்தை முதல்வர் வழங்க உள்ளார்.
இதையும் படிங்க: "விஜய் கொள்கை வேறு.. எங்களது கட்சியின் கொள்கை வேறு" - சீமான் பளிச் பதில்!
முதல்வர் படைப்பகம் என்ற பெயரில் இந்த படைப்பகத்தை வரும் நவம்பர் 4ஆம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார். ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு படிக்க நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல் 'கோ ஒர்கிங் ஸ்பேஸ்' இது தான்.. இதற்கு முதல்வர் படைப்பகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாணவ செல்வங்களுக்கு முதல்வர் படைப்பகம் அர்ப்பணிக்கப்பட்ட உள்ளது'' என்றார்.
அதனை தொடர்ந்து, திராவிட மாடல் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாநாட்டில் பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, '' திமுக கூடிக் கலைகின்ற மேகக் கூட்டம் இல்லை, கொள்கை சார்ந்த கூட்டம். எப்படிப்பட்ட புயல், மழை, வெள்ளம் வந்தாலும் அனைத்தையும் எதிர்த்து கடல் அலை முரணாக இருக்கின்றபோது கூட அதை நேர்த்தியாக நடத்தி செலுத்துகின்ற மாலுமி எங்கள் தமிழக முதல்வர் உள்ள வரை எந்த சக்தியாலும் திராவிட முன்னேற்ற கழகத்தை அசைத்துப் பார்க்க முடியாது'' என்றார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அதையெல்லாம் முதல்வர் தான் முடிவு எடுப்பார் இன்னும் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகாலம் உள்ளது என்றார். மேலும், இந்த நிகழ்வில் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்