சென்னை: தமிழகத்தில் தக்காளி கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டு அதிகமான விலைக்கு போவதற்கு வாய்ப்பு இல்லை, அப்படியான நிலை வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது, ''மூன்று ஆண்டுகளுக்கு முன்னே தேர்தல் வாக்குறுதியில் மிகத் தெளிவாக தமிழகத்தில் உள்ள அரசு காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று முதல்வர் கூறியிருந்தார்.
ஏதோ வாய்க்கு வந்த வாக்குறுதிகளை கூறிவிட்டு அதை செய்யாமல் சென்ற முதலமைச்சர் அல்ல. சொல்லாத பல வாக்குறுதிகளையும் செய்து கொண்டிருக்கிறார். தற்போது முதலமைச்சரால் கூட்டுறவுத் துறையில் 13 காலிப் பணியிடங்களை தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு முறையாக கூட்டுறவு துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
காலிப் பணியிடங்களை நிரப்புவதன் மூலமாக, பலருக்கு வேலை வாய்ப்பு தருவதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் வகையில் கூட்டுறவுத் துறை சிறப்பாக நடக்கும். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள கிராமங்களில் வாழக்கூடிய மக்களுக்கு சேவை செய்யும் ஒரு துறையாக கூட்டுறவுத்துறை உள்ளது.
இந்த காலக்கட்டத்தில் தக்காளி விளைச்சல் என்பது குறைந்து வருகிறது. விவசாயிகளுக்கு தோட்டக்கலை சார்பாகவும், நம்முடைய கூட்டுறவுத் துறை சார்பாகவும் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறோம். தக்காளி தட்டுப்பாடு ஏற்படும் காலத்தில் விளைச்சலை மேற்கொண்டால் விலை கூடுதலாக கிடைக்கும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு விவசாயிகள் தக்காளியை கூடுதலாக விளைச்சல் செய்கின்றனர்.
தக்காளி கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டு அதிகமான விலைக்கு போவதற்கு வாய்ப்பு இல்லை. அப்படி ஒருவேளை வந்தாலும், அதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கூட்டுறவுத் துறை, உணவுத் துறை, வேளாண் துறை ஆகியவை சேர்ந்து எடுக்கும். பண்ணை பசுமை கடைகளில் விற்கப்படும் தக்காளி ஐம்பது ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது'' என்றும் அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
13 துணைப் பதிவாளர்களுக்கு பணி நியமனம்: முன்னதாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-1இல் தேர்ந்தெடுக்கப்பட்டு கூட்டுறவுத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 13 துணைப் பதிவாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். பணிநியமன ஆணைகளை பெற்றவர்கள், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பனை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதையும் படிங்க: அமைச்சர் பொறுப்பேற்று மூன்றாண்டாகியும் ஆய்வு மேற்கொள்ளவில்லையா? சபையில் கோபப்பட்ட அவை முன்னவர்!