சென்னை: நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், 4வது நாள் அமர்வு இன்று (பிப்.15) நடைபெறுகிறது.
இதில், காரமடை நகராட்சி பகுதியில், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அரசு முன்வருமா என்று சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ் கேள்வி எழுப்பினார். இதற்கு, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை விளாங்குறிச்சியில், 61.59 ஏக்கர் பரப்பளவில், ரூ.107 கோடி முதலீட்டில், எல்காட் நிறுவனம் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கியுள்ளது.
அதே போன்று, அப்பகுதியில் 3 ஆயிரத்து 524 சதுர அடியில் நிர்வாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில், அப்பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 16 ஆயிரத்து 809 பணியாளர்களுடன், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடம் தரும் வகையில், 2.66 லட்சம் சதுர அடியில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது.
எனவே, காரமடையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டிய தேவை இல்லை. வேலைவாய்ப்பை அதிகம் தருவது ஐடி (IT-Information Technology) துறைதான். ஆண்டுதோறும் சராசரியாக 4-5 மில்லியன் சதுர அடியில் ஐடி நிறுவனங்கள், புதிதாக கட்டடம் கட்டுவார்கள். ஆனால், கடந்த ஒரே ஆண்டில் சென்னையில் 11 மில்லியன் சதுர அடியில் ஐடி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “எல்காட் நிறுவனம் கடந்த ஆட்சியில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டடம் கட்டினர். இதனால், அவை திறக்க முடியாத நிலை உள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு, 2.5 லட்சம் சதுர அடியில் கோவையில் கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்பட்டால், பல புதிய வேலை வாய்ப்பு கோவை பகுதியில் கிடைக்கும்.
மேலும், வெள்ளம், பேரிடர் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் அதிக நிறுவனங்கள் நிறுவப்படாமல், மற்ற பகுதியில் புதிய நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன. மனித வளம்தான் தமிழகத்தின் முக்கிய சக்தி. இந்தியாவிலேயே தமிழகத்தில் ஆண்டிற்கு 17 சதவிகித பொறியியல் பட்டதாரிகள் படித்துவிட்டு வெளியேறுகிறார்கள்.
பெங்களூர், ஹைதராபாத்தில் இருந்து வெளியேறும் ஐடி நிறுவனங்கள், கோவை மற்றும் மதுரையை நோக்கி வருகின்றன. வரும் பிப்ரவரி 23 மற்றும் 24ஆம் தேதி தமிழகத்தில் ஐடி மாநாடு நடைபெற உள்ளது. அதில் புதிய வெளிநாட்டு நிறுவனங்கள் ஈர்க்கப்படும்” என்று பதில் அளித்தார்.
இதையும் படிங்க: TN Assembly Session: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் தொடரின் 4ஆம் நாள் அமர்வு!