கன்னியாகுமரி: பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இதில், பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கூட்டத்தில் அவர் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், ஒவ்வொரு வீடுகளிலும் 6 அடியில் உறிஞ்சு குழிகள் அமைத்தல், குப்பைகள் மற்றும் திடக் கழிவுகளை உரமாக மாற்றுதல், நெகிழிகள் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்றுதல், மாநகராட்சிப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், சாலைப் பணிகளை விரைந்து முடித்தல்” குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது, “தமிழ்நாட்டில் பா.ஜ.கவை விமர்சனம் செய்யாமல் அதிமுக அரசியல் செய்ய முடியாது. பா.ஜ.கவை எதிர்த்துப் பேசாமல் அரசியல் இல்லை என்பதை அதிமுக தற்போது புரிந்துள்ளது. அதனால்தான் பாஜக-வைப் பற்றி அதிமுகவினர் பேசத் துவங்கியுள்ளனர். ஆனால், கடந்த காலங்களில் அதிமுக செய்த தவறுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும்.
வரும் தேர்தலில் அதிமுகவை மக்கள் ஆதரிக்கப் போவதில்லை என்று கூறினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொய்களை கட்டவிழ்த்து விடுகிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று, ஜி.எஸ்.டி. தொடர்பான தகவல்களுக்கு முற்றிலும் முரணாக அவர் பேசி வருகிறார்” என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: டெல்லியில் தொடங்கிய எம்.எஸ்.சுவாமிநாதனின் பயணம் - நெஞ்சை சிலிர்க்கும் விவசாயத்தின் மீட்பு..!