விழுப்புரம்: விழுப்புரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "திமுகவை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பாஜக எதையும் செய்யாத நிலையில், 3 ஆண்டிகளில் சொன்னதைச் செய்தவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் திகழ்கிறார். குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளில் ஆண்டுகளில் முதலமைச்சர் செய்த சாதனை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்" எனப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாஜக பாசிச ஆட்சியை கொண்டு வர பாஜக முயல்கிறது. மேலும், பிரமர் மோடி சர்வாதிகாரியாக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார். குடியுரிமை சட்டத்தை (CAA) அமல்படுத்தி இலங்கையிலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளார்.
இதையும் படிங்க: “அது பம்மாத்து அறிக்கை” - அதிமுக அறிக்கையை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!
உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து மார்ச் 19ஆம் தேதியே சட்டப்பேரவை தலைவர் என்னை சட்டமன்ற உறுப்பினராக அறிவித்துவிட்டார். அதன் பிறகும், ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை. பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை என்றால், உச்சநீதிமன்ற நீதிபதி ஆளுநர் மீது நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்த பிறகுதான் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்" எனப் பேசினார்.
மேலும் பேசிய அமைச்சர் பொன்முடி, "பாஜக அமலாக்கத்துறை போன்ற துறைகளை கையில் வைத்துக்கொண்டு டெல்லி முதலமைச்சரையே கைது செய்துள்ளார்கள். அமலாக்கத்துறை அனுப்பி தான் பாஜகவிற்கு 2 ஆயிரத்து 500 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.
திமுகவின் தேர்தல் அறிக்கையை தான் அதிமுக காப்பி அடித்துள்ளது. சில பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா அகியோர் ஆட்சியில் இருந்தபோது அமலுக்கு வராத நீட் தேர்வு (NEET Exam), எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில் நீட் தேர்வு வந்துள்ளது. மேலும் பாஜகவும், அதிமுக மறைமுக உறவில் உள்ளனர்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநர், எம்.எல்.ஏவிற்கு பதிலாக, சாதாரண தொண்டனை நிறுத்திக் காண்பியுங்கள் - அண்ணாமலைக்கு அதிமுக வேட்பாளர் சவால்..