சென்னை: மருது சகோதரர்களின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மருது சகோதரர்களின் திருவுருவ சிலைகளுக்கு பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை செலுத்தினார்.
அதன் பின் செய்தியாளர்களுக்கு சந்தித்த அவர் கூறியதாவது,"சுதந்திர போராட்ட வீரர்களுக்கு முழுமையான மரியாதை செலுத்துவதில் பாஜக மகிழ்ச்சி கொள்கிறது.
சுதந்திர இந்தியாவில் மருது சகோதரர்களின் பங்கு முழுமையாக நிலை நிறுத்தப்படவில்லை. யாருடைய சரித்திரம் மறைக்கப்பட்டதோ அவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுப்பதில் முழு முயற்சியை பிரதமர் மேற்கொண்டு வருகிறார்.
ஆளுநரின் பொது நிகழ்ச்சிகளை புறக்கணித்தால் பரவாயில்லை. ஆனால், பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை உயர் கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பது நல்லதல்ல. அவை அரசியலை தாண்டி நடக்கும் நிகழ்வுகள். பட்டம் பெரும் மாணவர்களுக்கு அமைச்சர் என்ற வகையில், நல்வழியை காட்டுவதற்கு முறை இருக்கும். அதை புறம் தள்ளுவது சரி அல்ல.
அரசியலையும், கல்வியையும் கலப்பது தமிழகத்தின் வாடிக்கையாகி விட்டது. புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, துணைவேந்தர்களின் நியமனம், பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு என அனைத்தையும் அரசியலாக்கி வருகிறார்கள் என்பது வேதனையான ஒன்றாகும்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் புறக்கணிப்பு!
அடிப்படை கல்வியிலும் அரசியல் புகுத்துகிறார்கள். மாற்று சிந்தனைகள் இருந்தாலும், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கக் கூடாது. அரசாங்கத்தில் எதுவுமே சரியாக நடப்பதாக தெரியவில்லை. தென் சென்னையில் நான் போட்டியிடும் போது கூட குப்பை கிடங்கு குறித்து பேசிக் கொண்டு இருந்தோம். ஆனால் இன்றளவும் கூட அக்குள்ள குப்பைகள் அகற்றபடவில்லை, திடக்கழிவு மேலாண்மை சரியாக பயண்படுத்தபடவில்லை என்பது கவலையளிக்க கூடிய வகையில் இருக்கிறது.
முதலமைச்சரும், துணை முதலமைச்சர் எங்களை தோற்கடிப்பதற்கு ஆளே இல்லை என்ற ஆணவத்தில் பேசி வருகிறார்கள்.திமுக கூட்டணியில் விரிசல் இல்லை விவாதங்கள் இருக்கிறது என முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் விரிசல்களை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு விவாதங்கள் நடந்து வருகின்றன. 2026 ஆம் ஆண்டு தேர்தல் திமுக நினைக்கும் அளவிற்கு சுலபமாக இருக்காது. எந்த ஆட்சி வந்தாலும் அது கூட்டணி ஆட்சியாக தான் இருக்கும்" என தெரிவித்தார்.