மதுரை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அரசியலில் மிகுந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர். அவர் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம். அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கும், எனக்கும் இல்லை என அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு நூலகப் பராமரிப்பு பணிகள் மற்றும் கோரிப்பாளையம் பகுதியில் நடைபெறும் மேம்பால கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (டிசம்பர் 16) திங்கட்கிழமை ஆய்வு செய்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "பாலங்களின் உறுதித் தன்மையைப் பொறுத்தவரை எந்தவித சந்தேகமும் இல்லை. சாலைகளின் மீது கட்டப்படும் மேம்பாலங்களுக்கும், ஆறுகளின் குறுக்கே கட்டப்படும் பாலங்களுக்கு இடையில் வேறுபாடுகள் உள்ளது. ஆற்றின் குறுக்கில் கட்டப்படும் பாலங்கள் தண்ணீர் போக்கை கணக்கில் கொண்டு அமைக்கப்படுகின்றன.
எந்த எதிர்பார்ப்பையும் மீறி 52 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகின்ற இடத்தில், இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் பெருகினால், பாலங்கள் விரிசல் விடுவதற்கும், அடித்துக்கொண்டு செல்வதற்கும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச கன அடி நீரை கணக்கில் கொண்டு பாலம் கட்டுவதால், திட்ட மதிப்பீடு செலவு 4 மடங்கு கூடுதலாகும். தமிழ்நாட்டின் பொருளாதாரம் அதற்கு இடம் தராது. தண்ணீரில் பாலம் அடித்துச் செல்லப்படுவது தரம் இல்லை என அர்த்தமில்லை," என்றார்.
ஆதவ் அர்ஜூனாவிடம் அனுமதி பெற வேண்டுமா?
ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு குறித்த செய்தியாளர்கள் எழுப்பியக் கேள்விக்கு, பதில் அளித்த அவர், "கடந்த 2001 -ல் மங்களூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று திருமாவளவன் சட்டமன்றத்திற்கு வந்தபோது அவரின் பக்கத்து இருக்கையில் தான் நான் இருந்தேன். அன்று முதல் எனக்கும் அவருக்கும் நட்பு என்பதைத் தாண்டி, சகோதர பாசத்துடன் பழகக் கூடியவர் திருமாவளவன்.
இதையும் படிங்க: திருமா அண்ணனின் விமர்சனத்தை ஆலோசனையாக ஏற்கிறேன் - ஆதவ் அர்ஜுனா
அவருக்கு எந்தவொரு அழுத்தத்தையும் நான் கொடுக்கவில்லை. அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. திருமாவளவனிடம் பழகுவதற்கு ஆதவ் அர்ஜூனாவிடம் அனுமதியா கேட்க முடியும்?
அழுத்தம் கொடுத்துதான் அவர் ஒரு முடிவெடுக்க வேண்டும் என்ற நிலை இல்லை. அரசியலில் மிகுந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர். அரசியலைப் பற்றி நன்கு புரிந்து கொண்டவர். அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கும், எனக்கும் கிடையாது. அவர் சுயமாக முடிவெடுப்பதற்கு அந்த கட்சியில் அவருக்கு உரிமை உண்டு. எனவே, அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை," என்றார்.
சாலை பராமரிப்பு பணிகள்:
சாலைகளைப் பொறுத்தவரை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட இரண்டு விதமான சாலைகள் உள்ளன. பொதுவாக தண்ணீருக்கும், தாருக்கும் ஆகாது. தார் சாலை ஈரமாக இருக்கும் போது, போக்குவரத்து சமயத்தில் சாலைகள் பெயர்ந்து விடுவது இயற்கை.
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமாக 66 ஆயிரம் கிலோமீட்டர்கள் சாலைகள் உள்ளது. நம்ம சாலை செயலி மூலமாக, பாதிக்கப்பட்ட சாலைகள் குறித்து தகுந்த புகைப்பட ஆதாரத்தோடு இடத்தை குறிப்பிட்டு புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க விசிகவில் இருந்து முழுமையாய் விலகினார் ஆதவ் ஆர்ஜூனா! அடுத்தது என்ன?:
முன்னதாக, விசிக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா, கடந்த 6ஆம் தேதி தவெக தலைவர் விஜய் வெளியிட்ட 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று, தமிழ்நாட்டில் மன்னராட்சி ஒழிக்க வேண்டும் என பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையாகிய நிலையில், விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.