வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு பயிலும் 81 மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஒரு டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டுமென காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால், கர்நாடக அரசு அதனை ஏற்காமல், 8,000 கன அடி தண்ணீர் மட்டுமே தருவோம் என்று கூறுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது 11,574 கன அடி தண்ணீர் ஆகும். அதைக் கூட தர முடியாது என்று கர்நாடக அரசு கூறுகிறது. தற்போது கர்நாடகாவில் கபினி அணையில் இருந்து அதிக அளவில் உபரிநீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் உள்ள ஹேமாவதி உள்ளிட்ட நான்கு அணைகளில் இருந்துதான் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும். ஆனால், கர்நாடக அரசு அதிலிருந்தும் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது.
இன்றளவில் மேட்டூர் அணைக்கு 4,047 கன அடி தான் தண்ணீர் வந்துள்ளது. காவிரி பிரச்னை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக் கூறியுள்ளேன். இப்போது கர்நாடகாவில் அதிக அளவில் மழை பெய்ததால் அவர்கள் எந்த அளவிற்கு தண்ணீர் திறந்து விடுகிறார்கள் என்பதை பார்த்து, முதலமைச்சருடன் பேசி ஆலோசனை செய்து அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
காவிரி பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதா? அல்லது நானே கர்நாடக மாநிலத்திற்கு கடிதம் எழுதுவதா அல்லது காவிரி ஒழுங்காற்றுக் குழுச் செயலாளரைச் சந்தித்து பேசுவதா என்பதை இன்று முதலமைச்சருடன் பேசி ஆலோசனை செய்யப்படும். காவிரியில் இருந்து உபரிநீர் மட்டுமே வருகிறது. ஆனால், உரிமை நீர் வருவதில்லை என செய்தியாளர்கள் கேட்டதற்கு, உபரிநீரைத் தான் கர்நாடக அரசு உரிமை நீர் என்று சொல்கிறது.
காவிரி பிரச்னையில் நிரந்தரத் தீர்வு ஏற்பட உச்ச நீதிமன்றம் இறுதி முடிவு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றமும் அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்துதான் வருகிறது. ஆனால், கர்நாடகா அரசுதான் அதனை பின்பற்றவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு காவிரி நீர் பிரச்னை தொடர்பாக முழுத் தகவலும் தெரியாது. அவர்கள் ஆட்சியில் இருந்தபோது மட்டும் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார்களா? எனவே, காவிரி தொடர்பான முழுத் தகவலும் தனக்குத் தெரியும். அதனை அறிந்துதான் செயல்பட வேண்டும். அதனுடைய நுணுக்கங்களை அறிந்து தான் செயல்பட வேண்டும்; அப்படித்தான் நான் செய்து வருகிறேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “62 ரூபாய் குண்டில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை முடித்து விட்டார்கள்” - அண்ணாமலை விமர்சனம் - Annamalai on Encounter