சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) வனத்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தின்போது, பதிலுரையில் யானைகள் வழித்தடம் குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசிவந்தார். அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன் மெளலானா, "யானை வழித்தடங்கள் பல இடங்களில் மறைக்கப்படுகின்றன. ஈஷா யோகா மையம் நிகழ்ச்சி நடத்தும்போது யானை வழித்தடங்களை மறைத்துவிட்டார்கள்" என்றார்.
அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், "யானை வழித்தடங்கள் பற்றி யாருக்கும் முழு புரிதல் இல்லை, தெளிவுப்படுத்தும் எண்ணத்தில் தான் பேசுகிறேன். வல்லுனர்களுடன் ஆலோசித்து மக்களின் கருத்து கேட்கப்பட்டு முதலமைச்சரின் கருத்துக்கு பின்னரே, முழுவதுமாக அறிவிக்கப்படும்;யாரும் அவசரப்பட வேண்டாம்" என பதில் அளித்தார்.
அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், "வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரிசர்வ் காடுகளில் பலர் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டுகின்றனர் என பத்திரிகையில் செய்தி வருகின்றது. ஈஷா யோகா மையம் உங்களிடம் அனுமதி பெற்று தான் அந்த இடத்தை பெற்றார்களா? என சட்டமன்ற உறுப்பினர் கேள்வி கேட்கிறார், அதற்கு நேரடி பதில் தெரிவிக்கவும் என்றார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் மதிவேந்தன், "முழுமையான விபரம் தெரியாமல் சொல்லக்கூடாது, தேவையான அனுமதி பெற்றுள்ளாரா என்பதை ஆய்வு செய்து தான் சொல்ல வேண்டும். தெரியாமல் சொல்லக்கூடாது" என பதில் அளித்தார். இதனால் அதிருப்தி அடைந்த துரைமுருகன், "நீங்கள் பதவி ஏற்று மூன்றாண்டுகள் ஆகிறது. மூன்று ஆண்டுகளாக இது பற்றி ஆய்வு செய்யவில்லையா?" என கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ரூ.4 கோடி மதிப்பீட்டில் விஷவாயு கண்டறியும் சென்சார்.. அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு!