சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 67வது தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 14) வழங்கினார்.
மேலும், 67வது இந்தியப் பள்ளிகளின் விளையாட்டுக் கூட்டமைப்பு 2023-24ஆம் கல்வியாண்டில் நடத்திய தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 409 வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களையும், பரிசுத் தாெகையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது தேசிய அளவிளான கபடிப் போட்டியில் ஒரு முறை தங்கப்பதக்கமும், 4 முறை வெள்ளிப் பதக்கமும் வென்ற வீராங்கனை கார்த்திகா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சான்றிதழும், பரிசும் பெற்றார். அப்போது விழா மேடையிலேயே தங்கள் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், இந்தியாவிலேயே பள்ளிக்குழந்தைகளை தன் பிள்ளையாக முதலமைச்சர் நினைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுகிறார். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 1,728 பள்ளிகள் 100க்கு 100 தேர்சி பெற்றுள்ளன.
மேலும், சில பள்ளிகளில் படித்த மாணவர்களில் ஒரு சில மாணவர்கள் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததால் தேர்ச்சி சதவீதம் குறைந்திருக்கிறது. ஆனால், அவர்களும் துணைத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறுவார்கள். இதனால் 100 சதவீதம் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை அதிரிக்கும். அரசியலில் 40க்கு 40க்கு பெற்று தலைமை ஆசிரியராக முதலமைச்சர் இந்த நிகழ்சிக்கு வந்துள்ளார்.
தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகளில் 409 மாணவர்கள் தேசிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றனர். எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் தான் துணை முதலைச்சராக இருக்கிறார்” என்றார். பின்னர், தேசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட கபடி வீரர் கார்த்திகா கூறும்போது, முதலமைச்சரிடம் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை பெறும் பொழுது தங்கள் பகுதியில் விளையாட்டு வீரர்களுக்கு என பயிற்சி எடுப்பதற்கு முறையான விளையாட்டு மைதானம் இல்லை எனவும், அதனை அமைத்து தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.
தன்னுடைய இல்லம் கண்ணகி நகர் பகுதியில் இருப்பதால், அங்கு 30க்கும் மேற்பட்ட கபடி விளையாட்டு வீரர்கள் இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கான விளையாட்டு மைதானமும் அல்லது பயிற்சி எடுப்பதற்கான விளையாட்டுத் திடல் இல்லாமல் உள்ளது. இதனால் அங்குள்ள பூங்காவில் பயிற்சி பெறுகிறோம்.
எங்களுக்கு மைதானம் அமைத்து தந்தால் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்போம் எனவும், இங்கு திறமை மட்டுமே பார்க்கப்பட வேண்டும், யார் எந்த பகுதியில் இருந்து வருகிறார் என்று எல்லாம் பார்க்கத் தேவையில்லை என கூறினார்.