நாமக்கல்: தமிழ்நாட்டில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று பரமத்தி-வேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஓவியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிக்குள் காலை 8 மணிக்கு நுழைந்த அமைச்சர், காலை உணவு உட்கொண்டிருந்த மாணவர்களுடன் உரையாடினார். ஆசிரியர்கள் யாரும் அந்நேரத்தில் வராத காரணத்தால் பள்ளி முழுவதும் சுற்றிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டார். காலை உணவு பணியாளர்கள் மட்டுமே அப்போது பள்ளியில் இருந்த காரணத்தால், அவர்கள் மட்டுமே அமைச்சரின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தனர்.
காலை உணவுத் திட்டத்தில் எத்தனை மாணவர்கள் சாப்பிடுகிறார்கள்? பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு? பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகள் குறித்தும் அப்போது வந்திருந்த ஊர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்வதற்காக திருக்குறள் மற்றும் தமிழ் - ஆங்கில எழுத்துகளை சொல்ல சொல்லி கேள்விகளைக் கேட்டார்.
காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டபோது மாணவர்கள் சரியாக உணவை உட்கொள்கின்றார்களா? உணவு வீணாகிறதா? என்பதை ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பள்ளியில் இருந்து கண்காணிக்க வேண்டும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ள போதிலும், ஆசிரியர்கள் யாரும் மாணவர்கள் காலை உணவு உட்கொள்கின்ற வேளையில் பள்ளியில் இல்லை என்பது சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தினார்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) September 12, 2024
இதை தொடர்ந்து இன்று அரசு உதவிபெறும் பள்ளி மாணவச் செல்வங்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் 188-ஆவது… pic.twitter.com/6XaZGKwPqu
இதையடுத்து, 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ், 188-ஆவது ஆய்வை சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுசாமியின் சேந்தமங்கலம் தொகுதியில் மேற்கொண்டார். அப்போது, சேந்தமங்கலம் கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான கலைமகள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் பயிலும் 49 மாணவர்களும் காலை உணவு திட்டத்தால் பயன் பெறுகின்றார்கள். இந்த நிலையில், பள்ளிக் கட்டட மேம்பாடு, தூய்மை பணியாளர்கள் தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்தார்.