திருச்சி: திருச்சி சிந்தாமணியில் உள்ள தேசிய பள்ளி மைதானத்தில், இன்று ஆய்வக உதவியாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கும் விழாவான ‘பயிற்சி கட்டகம் வெளியிடுதல் விழா’ நடந்தது. அந்த விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் கூறுகையில், “ஒருங்கிணைந்த கல்வி எனக் கூறப்படும் 'சமக்ர சிக்ஷா' மூலமாக ஒவ்வொரு வருடமும் 60 சதவீதம் நிதி மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதி என்பது 2,152 கோடி, அதில் 572 கோடி ரூபாய் ஜூன் மாதம் வழங்க வேண்டும். ஆனால் இதுவரை வழங்கவில்லை.
இதனால் மாணவர்களின் கல்வித்தரமும், 15,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் நிலைமையும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதுவரை இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மத்திய அமைச்சர் இல்லத்திற்குச் சென்று கருத்துகளை தெரிவித்தோம். அதேபோல, நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தும் நேரடியாகச் சென்று மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், அவர்கள் புதிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட்டு கொடுத்தால் உடனடியாக பணத்தை தருகிறோம் என்கின்றனர்.
மேலும், மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது எனக் கூறியும், அதற்கு பின்னாள் அதுகுறித்து பேசிக் கொள்ளலாம் எனக் கூறினர். ஆனால், தற்போது மும்மொழியை ஏற்றுக்கொண்டால் தான் நிதி தருவோம் என்ற நிலைக்கு தமிழகத்தை தள்ளி உள்ளனர். எனவே, கல்வி நிதி குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி எங்கள் நடவடிக்கை இருக்கும். ஆளுநர் மாநில பாடத்திட்டத்தின் தரம், தேசிய பாடத்திட்டத்தினுடன் ஒப்பிட்டால் மாநில பாடத்திட்டம் மோசம் என அறியாமையில் பேசுகிறார். தமிழகத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுள் அதிகமானோர் மாநிலத்தில் இருந்து நடத்தப்படும் தேர்வுக்காகதான் தயாராகிறார்கள்.
இந்த மாணவர்களிடம் தேவைப்படும் புத்தகம் குறித்து கேட்டால், கூடுதலாக மாநிலத்தின் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு புத்தங்கள் தாருங்கள் என்கின்றனர். அதிலும், யுபிஎஸ்சி மாணவர்களே எளிமையாக பாடத்தை புரிந்துகொள்ள மாநில புத்தகத்தைதான் தேடி படிக்கின்றனர். எனவே, நான் ஆளுநரை தமிழகத்தில் உள்ள ஏதேனும் நூலகத்திற்கு அழைத்துச் சென்று, அவரையே மாணவர்களிடம் கேட்டறியச் செய்தால் உண்மை தெரிய வரும்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு சரி.. ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளுக்கு?” - அறிவுச்சமூகம் கோருவது என்ன?