சென்னை: சென்னை விமான நிலையத்தின் இணையதள சேவை இன்று பகல் 12 மணியிலிருந்து திடீரென முடங்கியது. இணையதளம் சரியாக வேலை செய்யாமல் மிகவும் தாமதமாக செயல்பட்டதால் விமான பயணங்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து விமான நிறுவன கவுண்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமித்து, போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்தனர். இதனால் ஒவ்வொரு பயணிக்கும் போர்டிங் பாஸ் கொடுப்பதற்கு தாமதம் ஆகியதால் பயணிகள் விமானங்களில் ஏறுவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இதனால் சென்னையிலிருந்து மும்பை, லக்னோ, பெங்களூர், மதுரை, திருவனந்தபுரம், பாட்னா, சிலிகுரி, ஹைதராபாத், கோவை, தூத்துக்குடி, திருச்சி, டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, புனே, கோவா செல்லும் விமானங்கள் மற்றும் சர்வதேச விமானங்களான சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, டாக்கா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னையிலிருந்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
சர்வதேச அளவில் மைக்ரோசாப்டில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக சென்னை விமான நிலையத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் இணையதள தொழில்நுட்பக் கோளாறை சீர் செய்யும் பணிகளில் சர்வதேச அளவில் பொறியாளர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சென்னை விமான நிலையத்திலும் பொறியாளர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், விமானங்கள் திடீர் தாமதமாவதற்கான காரணம் குறித்தும், எப்போது நிலைமை சீராகும் என்பதை பற்றியும், விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு முறையான அறிவிப்புகள் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானதாக தெரிகிறது. இந்நிலையில், அடுத்த ஓரிரு மணி நேரங்களில் இணையதளக் கோளாறு முழுமையாக சீரமைக்கப்பட்டு, விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து விமான நிலையம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே ரயில் சேவை துவக்கம்.. எங்கெல்லாம் நின்று செல்லும்?